செய்திக்கொத்து

2 mins read
d1285c97-038c-42ab-be43-865fbfea1001
-

வடகொரிய ராணுவத்தைப் பலப்படுத்த கிம் ஜோங் உன் அழைப்பு

பியோங்யாங்: வடகொரிய ராணுவத்தைப் பலப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் தமது உயர் ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் ராணுவம் எந்த வகையில் பலப்படுத்தப்படும் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய ராணுவ ஆணையக் கூட்டத்தின்போது திரு கிம் இந்த அழைப்பை விடுத்ததாக வடகொரிய ஊடகம் தெரிவித்தது.

கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழல் மிக வேகமாக மாறி வருவதாகவும் நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவத்தைப் பலப்படுத்த வேண்டும் என்றும் திரு கிம் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

'மக்கள்தொகையில் கால் பகுதியினரை கொரோனா பாதித்துள்ளது'

மெக்சிக்கோ சிட்டி: மக்கள்தொகையில் 25 விழுக்காட்டினரை கொவிட்-19 பாதித்துள்ளதாக மெக்சிக்கோவின் சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது. கிருமித்தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை என அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களைவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறத்தாழ 31.1 மில்லியன் பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளதாக கடந்த ஆண்டு தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

புட்டின்: ரஷ்ய-அமெரிக்க உறவு

மிக மோசமான நிலையில் உள்ளது

மாஸ்கோ: அண்மைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரஷ்ய-அமெரிக்க உறவு மிக மோசமான நிலையில் இருப்பதாக என்பிசி செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

அவர் அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் வரும் புதன்கிழமையன்று ஜினிவாவில் சந்திக்க இருக்கின்றனர்.

ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா மீது தொடுக்கப்படும் இணையம் வழி தாக்குதல்கள், உக்ரேனிடம் ரஷ்யா மூர்க்கத்தனமாக நடந்துகொள்வது, அரசாங்க எதிர்ப்பாளர்களை ரஷ்யா சிறையில் அடைப்பது போன்ற விவகாரங்கள் குறித்து திரு புட்டினிடம் அதிபர் பைடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை திறமைமிக்கவர் என்று அதிபர் புட்டின் பாராட்டியுள்ளார். டிரம்ப்பைவிட அதிபர் பைடன் கொள்கை அடிப்படையில் முற்றிலும் மாறுபட்டவர் என்று அவர் கூறினார்.

சீனா: ஒரு கட்சி ஆட்சியை எதிர்ப்போர் ஹாங்காங்கின் எதிரிகளாவர்

பெய்ஜிங்: சீனாவின் ஒரு கட்சி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர விரும்புபவர்கள் ஹாங்காங்கின் எதிரிகளாவர் என்று சீன அரசாங்கம் தமது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது.

ஹாங்காங்கைப் பயன்படுத்தி சீனாவைக் கட்டுப்படுத்தவும் 'ஒரே நாடு இரு ஆட்சிமுறை' எனும் கோட்பாட்டை அழிக்கவும் முயற்சி செய்வோர் ஹாங்காங்கின் செழிப்பிற்கும் திடமான அரசியல் நிலைக்கும் எதிரானவர்கள் என்று சீனா சாடியுள்ளது.

சீன அரசாங்கம் எடுத்த உறுதியான முடிவுகளால் அண்மையில் ஹாங்காங்கில் ஏற்பட்ட குழப்பங்களை முடிவுக்குக் கொண்டு வரமுடிந்ததாக சீன அரசாங்கத்தின் தொடர்பு அலுவலக இயக்குநர் லுவோ ஹியூனிங் தெரிவித்தார்.

பிரிவினைவாதிகள் மீது குற்றம் சுமத்தும் மியன்மார் ராணுவம்

யங்கூன்: மியன்மாரெங்கும் உள்ள அரசாங்கக் கட்டடங்களிலும் பள்ளிகளிலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்த ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்களுக்குப் பிரிவினைவாதிகள் பயிற்சி அளித்து வருவதாக மியன்மாரின் ராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.