உலகில் பெருகிவரும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த ஜி7 குழுமம் வளர்ந்துவரும் நாடுகளுக்கான திட்டத்தை அளிக்க முன்வந்தது. பல ட்ரில்லியன் மதிப்பிலான பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு பதிலடி தர, தற்போது ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்தில் சந்தித்து வருகின்றனர்.
'பில்ட் பேக் பெட்டர் வர்ல்ட்' (B3W) திட்டத்தில் சேர்ந்துள்ள ஜி7 நாடுகள், 2035ஆம் ஆண்டுக்குள் வளர்ந்துவரும் நாடுகள் தங்களது கட்டமைப்பை மேம்படுத்த தேவைப்படும 40 ட்ரில்லியனைக் கொடுக்க முற்படும். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் கூடினர்.
சீனாவை எதிர்ப்பது இந்த முயற்சியின் நோக்கம் இல்லை. ஆனால் இன்றுவரையில் அமெரிக்க பண்புகளுக்கும் தரநிலைகளுக்கும் ஈடுகொடுக்கும் விதமாக வேறு எந்த முறையும் அமைக்கப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது சீனாவுடன் 100க்கும் அதிகமான நாடுகள், ரயில்வே, பாலங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டுமானத் திட்டங்களில் இணைந்துள்ளன. இந்த ஒப்பந்தங்களில் சீனா வெளித்தன்மையுடன் நடந்துகொள்வதில்லை என்றும் தொழிலாளர் நலன், சுற்றுச்சூழல் தூய்மை போன்றவற்றைக் கண்டுகொள்ளாத அதிகாரப் போக்கைக் கொண்டிருப்பதாக மேற்கத்திய நாடுகள் குறைகூறி வருகின்றன.

