நெதர்லாந்து நாடு முக்கிய காற்பந்து ஆட்டங்களில் பங்கேற்க பல ஆண்டுகள் காத்திருந்த நிலையில், நேற்று அதிகாலை யூரோ 2020 காற்பந்து போட்டியில் அது ஒருவழி யாக ஆட்டம் முடியும் தறுவாயில் தனது மூன்றாவது கோலைப் போட்டு உக்ரேனை 3-2 என வீழ்த்தியது.
இரு குழுக்களும் போட்ட மொத்தம் ஐந்து கோல்களும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் வர ரசிகர்கள் அனைவரும் அடுத்து என்ன நடக்குமோ என விறுவிறுப்புடன் போட்டியைக் கண்டு களித்தனர்.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் 58வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வெக்ஹோர்ஸ்ட் இரண்டாவது கோலைப் போட்டு தமது நாட்டு ரசிகர்களைத் துள்ளிக் குதிக்க வைத்தார்.
முன்னதாக, நெதர்லாந்தின் முதல் கோலை அணியின் தலைவரும் இங்கிலாந்து லிவர்பூல் குழுவுக்கு விளையாடுபவருமான வைன்ஹால்டம் போட்டு பரவசப்படுத்தினார். ஆனால் அடுத்த இரண்டு கோல்களை நான்கு நிமிடங்களில் போட்ட உக்ரேனைக் கண்டு அரங்கத்தில் கூடியிருந்த 16,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திகைப்படைந்தனர்.
பின்னர், இறுதி கோலை நெதர்லாந்தின் டென்ஸெல் டம்ஃபிரிஸ் போட ஹாலந்து ஒருவழியாக 3-2 என வெற்றி பெற்றது.
மற்றோர் ஆட்டத்தில் குரோவேஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கோல் போட்டு இங்கிலாந்து வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 57ஆம் நிமிடத்தில் கல்வின் பிலிப்பிஸ் கொடுத்த பந்தை ரஹீம் ஸ்டெர்லிங், ஒரு கோல் போட்டு இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்தார்.
வேறோர் ஆட்டத்தில் வடக்கு மெசிடோனியாவை ஆஸ்திரியா 3-1 என வீழ்த்தியது.

