வாஷிங்டன்: அமெரிக்காவின் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை 600,000ஐ கடந்தது. இது உலகம் முழுவதும் இந்தத் தொற்றால் மாண்ட 4 மில்லியன் மக்களில் 15 விழுக்காடு என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
அமெரிக்காவின் தற்போதைய வேகமற்ற தடுப்பூசி நடவடிக்கை அதிபர் ஜோ பைடனின் இலக்குகளை எட்ட கைகொடுக்காது என்று கூறப்படுகிறது.
ஜூலை 4ஆம் தேதிக்குள் 160 மில்லியன் மக்களுக்கு இரு தடுப்பூசி
களையும் போட்டுவிட வேண்டும் என்பதும் 70 விழுக்காட்டு பெரியவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியை போட்டு விட வேண்டும் என்பதும் திரு பைடனின் இலக்குகள். தற்போதைய வேகம் அதிகரிக்கவேண்டும் என்றபோதிலும் ஏற்கெனவே தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி நடவடிக்கை நல்ல பலனைத் தந்துள்ளது.
கொவிட்-19 மரண எண்ணிக்கை 500,000லிருந்து 600,000க்கு அதிகரிக்க 113 நாட்கள் ஆயின. ஆனால், இதற்கு முன்னர் 4000,000 என்பதிலிருந்து வெறும் 35 நாட்களில் 500,000ஐ தொட்டது மரண எண்ணிக்கை. இந்த விகிதம் தற்போது குறைவானதற்கு அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், கொவிட்-19 மரணங்களின் சராசரி எண்ணிக்கை உச்சத்தில் இருந்த ஜனவரி மாதத்தைக் காட்டிலும் தற்போது பன்மடங்கு குறைந்துவிட்டது. மே மாதத்தில் 18,587 கொரோனா கிருமித்தொற்று மரணங்கள் பதிவாயின. இது ஜனவரி மாதத்தைக் காட்டிலும் 81 விழுக்காடு குறைவு என்கிறது ராய்ட்டர்ஸ்.
இந்நிலையில், நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற அதிபர் பைடன், "தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடுவோருக்காக என் மனம் வருந்துகிறது.
"இந்தத் தொற்றை முறியடிக்க நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது. இந்த நிலையில் நமது போராட்டத்தை நிறுத்திவிட முடியாது.
"மக்கள் அனைவரும் இயன்றவரை சீக்கிரமாக தங்களுக்குரிய தடுப்பூசி
களைப் போட்டுக்கொள்ள வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

