பெய்ஜிங்: உலகை ஆட்டிப் படைத்து வரும் கொவிட்-19 கிருமி கிளம்பிய சீனாவின் வூஹான் நகரில் ஞாயிற்றுக்
கிழமை (ஜூன் 13) ஓர் அதிசயம் நிகழ்ந்தது.
அங்குள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாபெரும் பட்டமளிப்பு விழாவில் சுமார் 9,000 மாணவர்கள் நேரடியாக வந்து பங்கேற்றனர். அவர்கள் அனை
வரும் சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள் இன்றி கொவிட்-19க்கு முந்திய வழக்கத்தைப் போல சாதாரணமாக அமர்ந்திருந்தனர்.
மேலும், மாணவர்களில் ஒருவர்கூட முகக்கவசம் அணியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம். இந்த 9,000 மாணவர்களில் 2,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இயலாதவர்கள்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வூஹான் பல்கலைக்கழகம் பெரும் பாலான பட்டமளிப்பு நிகழ்வுகளை இணையம் வழியாகவே நடத்தியது. மிகக் குறைந்த மாணவர்களே அவற்றில் பங்கேற்றனர்.
அப்போது மாணவர்களும் ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
ஆனால் இந்த ஜூனில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி மாணவர்கள் சுதந்திரமாக கலந்து கொண்டதை அங்கு எடுக்கப்பட்ட படங்கள் காட்டின.

