பெட்டாலிங் ஜெயா: ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்குப் பயன்படுத்த மலேசியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனை மலேசிய சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
இது தவிர, கேன்சினோ, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளுக்கு நிபந்தனைப் பதிவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இவ்விரு தடுப்பூசிகளையும் ஒரு முறை போட்டுக்கொண்டாலே போதுமானது.
சிறுவர்களுக்குப் பயன்படுத்தும் வகையில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கு கூடுதல் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் தேசிய கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கு இணங்க, எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் பிரிவினருக்கு முன்னுரிமை வழங்குவது தொடரும் என்றார் டாக்டர் நூர் ஹிஷாம். ஐந்தாம் கட்ட தடுப்பூசித் திட்டத்தில் 12 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் பங்கேற்கும் வகையில் தேசிய கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் அவர்கள் சேர்க்கப்
படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா இதற்கு முன்னர் கூறியிருந்தார்.
உச்சத்தைத் தொட்ட எண்ணிக்கை
இதற்கிடையே, மலேசியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை திங்கட்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது.
அன்று ஒரே நாளில் 197,963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இவர்களில் 142,890 பேருக்கு முதல் தடுப்பூசியும் எஞ்சிய 55,073 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் போடப்பட்டதாக கொவிட்-19 தடுப்பூசி விநியோக உறுதிக்கான சிறப்புக் குழு தெரிவித்தது.
பிப்ரவரி 24ஆம் தேதி தடுப்பூசித் திட்டம் தொடங்கியது முதல் திங்கட்கிழமை பதிவான எண்ணிக்கையே ஆக அதிகம். அன்று முதல் இது வரை மலேசியாவில் 4.68 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, நாடளாவிய முடக்கத்தின் விளைவாக கிருமித்தொற்று எண்ணிக்கை சற்று குறைந்திருக்கும் வேளையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்து வதில் அரசாங்கம் அவசரம் காட்டவேண்டாம் என சுகாதாரத் துறை நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

