கிளாஸ்கோ: செக் குடியரசின் பேட்ரிக் ஷிக் சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை நடைபெற்ற யூரோ 2020, 'டி' பிரிவு ஆட்டத்தில் யூரோ போட்டித் தொடரின் தலைசிறந்த கோலை போட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஸ்காட்லாந்துடனான ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஷிக் போட்ட கோலுடன் செக் குடியரசு முன்னணிக்குச் சென்றது.
23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரதான காற்பந்துப் போட்டியில் பங்கேற்கும் ஸ்காட்லாந்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையுடன் களம் இறங்கியது. ஆனால், செக் குடியரசின் கட்டுக்கோப்பான ஆட்டத்துக்கு அதனால் ஈடுகொடுக்க முடியவில்லை.
பிற்பாதி ஆட்டத்தில் இன்னும் முனைப்புடன் ஆடிய செக் குடியரசு, ஸ்காட்லாந்தின் கோல் முனையை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தது. எப்படியாயினும் ஒரு கோல் போட்டு சமநிலை காண வேண்டும் என்ற ஸ்காட்லாந்தின் கனவை தவிடு பொடியாக்கியது செக் குடியரசு.
ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் திடலின் மத்தியில் பந்தைப் பெற்ற ஷிக், எதிரணியின் கோல் காப்பாளர் தனது இடத்தைவிட்டு அகன்றி ருப்பதைப் பார்த்தார்.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அவர், சுமார் 45.44 மீட்டர் தூரத்திலிருந்து கோல் முனையை நோக்கி உதைத்தார். பந்து உயரே பறந்து லாவகமாக வலைக்குள் புகுந்தது. அதைத் தடுத்து நிறுத்த ஸ்காட்லாந்து கோல் காப்பாளர் மேற்கொண்ட முயற்சி கைகொடுக்கவில்லை.
செக் குடியரசு இப்போது 3 புள்ளிகளுடன் 'டி' பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நாளை மறுநாள் அது இங்கிலாந்தைச் சந்திக்கும். ஸ்காட்லாந்து குரோவேஷியாவுடன் பொருதும்.
'இ' பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயினும் சுவீடனும் கோல் இன்றி ஆட்டத்தைச் சமநிலையில் முடித்துக் கொண்டன. இரு குழுக்களும் பல வாய்ப்புகளை வீணடித்தன. பிற்பாதி ஆட்டத்தில் சுவீடன் சிறப்பாக ஆடியது. அதன் ஆட்டக்காரர்கள் தொடர்ந்து ஸ்பெயினின் கோல்முனையை நோக்கி தாக்குதல் தொடுத்துக்கொண்டிருந்தனர். ஸ்பெயின் அடுத்து சனிக்கிழமையன்று போலந்தைச் சந்திக்கும். அதில் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சற்று பிரகாசமாக இருக்கும்.
மற்றோர் 'இ' பிரிவு ஆட்டத்தில் ஸ்லோவாக்கியா 2-1 என்ற கோல் கணக்கில் போலந்தைத் தோற்கடித்தது. ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் போலந்தின் கிரேகோஸுக்கு நடுவர் சிவப்பு அட்டை காண்பித்து ஆட்டத்தை விட்டு வெளியேற்றியதை ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்
படுத்தி ஸ்லோவாக்கியா கடுமையாகப் போராடியது. அதற்குப் பலன் தருவதுபோல, ஸ்லோவாக்கியாவின் ஆட்டக்காரர் மிலன் ஸ்கிரினியர் வெற்றி கோலை போட்டார்.
யூரோ 2020 இறுதிப் போட்டியைக் காண 40,000 பேர் அனுமதி
லண்டன்: யூரோ 2020 போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதியாட்டம் லண்டனின் வெம்ப்ளி விளையாட்டரங்கத்தில் நடைபெறும். அதனைக் காண 40,000 ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர்.
கோப்பா அமெரிக்கா: சமநிலையால் மெஸ்ஸி கோபம்
ரியோ டி ஜெனிரோ: அர்ஜெண்டினாவுக்கும் சிலிக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த கோப்பா அமெரிக்கா போட்டியில் அர்ஜெண்டி னா நட்சத்திரம் லையனல் மெஸ்ஸி ஃபிரிகிக் வாய்ப்பு மூலம் அற்புதமான ஒரு கோலை போட்டார். ஆனால் அந்த வெற்றி கோல் நிலைக்கவில்லை. பிற்பாதி ஆட்டத்தில் சிலி யின் அர்டுரோ விடால் அடித்த பெனால்டியை அர்ஜெண்டினா கோல் காப்பாளர் எமிலியானோ மார்டினெஸ் தடுத்தார். ஆனால், பந்து சிலியின் எட்வார்டோ வார்காஸிடம் சென்றது. அவர் அதைச் சற்றும் தாமதிக்காமல் கோலாக்கினார்.
"ஆட்டத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தி னாலும் நாங்கள் இறுதி வரை அதைக் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை. அந்த இயலாமையை சிலி குழு பயன்படுத்திக் கொண்டது," என்று மெஸ்ஸி குறைப்பட்டுக் கொண்டார்.
இதற்கிடையே மற்றொரு கோப்பா அமெரிக்கா போட்டியில் பராகுவே 3-1 என்ற கோல் கணக்கில் பொலிவியா குழுவை வென்றது. பெனால்டி வாய்ப்பு மூலம் முதல் கோலைப் போட்டார் பொலிவியாவின் எர்வின் சாவெட்ரா. பின்னர் பராகுவே கடுமையாகப் போராடி, ரோமேரோ கமாரா, ஏஞ்சல் ரோமேரோ இருவர் மூலம் இரண்டு கோல்களைப் போட்டது. பொலிவியாவின் ஜோம் குய்லர் தனது சொந்த வலைக்குள் பந்தைப் புகுத்தி யதால் அது பராகுவேயின் கோலாகியது.

