பிரேசிலியா: கடைசியாக விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் கைநழுவிப்போன வெற்றி ஒருவழியாக அர்ஜெண்டினா அணிவசமானது.
பிரேசிலில் பத்து அணிகள் இரு பிரிவுகளாக மோதி வரும் அமெரிக்கக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில், அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வென்றது. இதன்மூலம், 'ஏ' பிரிவில் சிலியுடன் அந்த அணி முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது.
ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் அணித்தலைவர் லயனல் மெஸ்ஸி அனுப்பிய பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் தள்ளி அர்ஜெண்டினாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் கைடோ ரோட்ரிகெஸ்.
லூவிஸ் சுவாரெஸ், எடின்சன் கவானி என இரு நட்சத்திரத் தாக்குதல் ஆட்டக்கார்களைக் கொண்டிருந்தும் உருகுவேயால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.
இன்னோர் ஆட்டத்தில் சிலி 1-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது.
நாளை நடக்கவுள்ள ஆட்டங்களில் அர்ஜெண்டினா-பராகுவே, உருகுவே-சிலி அணிகள் பொருதவிருக்கின்றன.