லண்டன்: பழைய எதிரியான ஸ்காட்லாந்தை வீழ்த்தி இருந்தால், இங்கிலாந்து இந்நேரம் ஐரோப்பியக் காற்பந்துக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்குள் நுழைந்திருக்கலாம்.
ஆனால், இங்கிலாந்து மந்தமாக ஆடியதால் நேற்று முன்தினம் நடந்த அந்த ஆட்டம் 0-0 என கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.
குரோவேஷியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தைப் போலவே, இந்த ஆட்டத்திலும் நட்சத்திர வீரரும் அணித்தலைவருமான ஹேரி கேனின் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாக இருந்தது. இதனால், ஆட்டத்தின் பிற்பாதியில் அவருக்குப் பதிலாக மார்க்கஸ் ரேஷ்ஃபர்டை மாற்று வீரராகக் களமிறக்கினார் இங்கிலாந்துப் பயிற்றுவிப்பாளர் கேரத் சௌத்கேட்.
ஆனாலும், அந்த அணியால் ஒரு கோல்கூட போட முடியவில்லை. ஆட்டத்தின் தொடக்கத்தில் ஜான் ஸ்டோன்ஸ் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. பிற்பாதி ஆட்டத்தின் மூன்றாம் நிமிடத்தில் மேசன் மௌன்ட் வலையை நோக்கி உதைத்த பந்தை அற்புதமாகப் பாய்ந்து தடுத்தார் ஸ்காட்லாந்து கோல்காப்பாளர் டேவிட் மார்ஷல்.
ஆட்ட நேரம் முழுவதும் ஸ்காட்லாந்து அணி, இங்கிலாந்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே விளங்கியது. குறிப்பாக, கைரன் டியர்னி, பில்லி கில்மோர் ஆகியோர் ஆடியவிதம் வியக்கத்தக்க வகையில் இருந்தது.
இதனிடையே, கிளாஸ்கோவில் செக் குடியரசும் குரோவேஷியாவும் மோதிய இன்னோர் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனானது.
நான்கு புள்ளிகளுடன் 'டி' பிரிவில் இரண்டாமிடத்தில் உள்ள இங்கிலாந்து, நாளை மறுநாள் நடக்கும் ஆட்டமொன்றில் செக் குடியரசுடன் மோதவுள்ளது. அந்த ஆட்டத்தில் தோல்வியைத் தவிர்த்தாலே போதும், இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.

