இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான கொவிட்-19 தடுப்பூசி ஒப்பந்தம் ரத்து
ஜெருசலேம்: இஸ்ரேலுடன் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தைப் பாலஸ்தீனம் ரத்து செய்துவிட்டது. அந்த உடன்பாட்டின்படி, குறைந்தது ஒரு மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளைப் பாலஸ்தீனத்திற்கு இஸ்ரேல் வழங்க வேண்டும். பதிலுக்கு, இவ்வாண்டு பிற்பகுதியில் அதே எண்ணிக்கையிலான தடுப்பூசிகளைப் பாலஸ்தீனம், இஸ்ரேலுக்குத் திருப்பித் தர வேண்டும். இந்த நிலையில், தன்னிடமுள்ள ஃபைசர் தடுப்பூசிகள் விரைவில் காலாவதியாக உள்ளன என்றும் பாலஸ்தீனத்தில் தடுப்பூசி நடவடிக்கையை விரைவுபடுத்த அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் கூறியது. ஆனால், பாலஸ்தீனம் அதனை ஏற்க மறுத்துவிட்டது.
கம்போடியா: தொற்றால் 20 பேர் பலி
நோம்பென்: கம்போடியாவில் முன்னில்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 20 பேர் கொவிட்-19 தொற்றால் மரணமடைந்து விட்டனர். இதனிடையே, இந்தியாவில் முதலில் தோன்றிய உருமாறிய 'டெல்டா' கிருமியும் அங்கு கண்டறியப்பட்டு உள்ளதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர். இதுவரை அந்நாட்டில் 42,052 பேரை கொரோனா தொற்றிவிட்டது; 414 மரணங்களும் பதிவாகி இருக்கின்றன.
மலேசியா: 7,000 கோழிகள் தீக்கிரை
குவந்தான்: மலேசியாவின் குவந்தானில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் நேற்றுக் காலை ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத் தட்ட 7,000 கோழிகள் மடிந்துபோயின. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் ஏறத்தாழ 3,000 கோழிகளைக் காப்பாற்றியதுடன், மற்ற கூண்டுகளுக்கும் தீ பரவாமல் தடுத்தனர். அரைமணி நேரத்திற்குள்ளாகத் தீ அணைக்கப்பட்டது.
ஈரானின் புதிய அதிபராக ரைசி தேர்வு
டெஹ்ரான்: ஈரான் அதிபர் தேர்தலில் பழைமைவாதியான 60 வயது இப்ராகிம் ரைசி வெற்றிபெற்றுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதத்தில் புதிய அதிபராக அவர் பொறுப்பேற்பார். நீதித் துறையின் தலைவராக இருந்த ரைசி, ஊழல் அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுப் பரப்புரையின் மூலம் மக்களிடத்தில் செல்வாக்கு பெற்றார். லஞ்ச, ஊழலுக்கு எதிரான போரைத் தொடர்வது, குறைந்த வருமானக் குடும்பங்களுக்காக நான்கு மில்லியன் வீடுகளைக் கட்டுவது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளார்.
கனமழை, நிலச்சரிவு: 16 பேர் மரணம்
காட்மாண்டு: நேப்பாளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பருவமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி குறைந்தது வெளிநாட்டினர் மூவர் உட்பட 16 பேர் மாண்டுவிட்டனர்; 22 பேரைக் காணவில்லை; 11 பேர் காயமடைந்தனர். தேடி மீட்கும் பணியிலும் நிவாரண உதவிகளை வழங்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். உடைமை, பொருட்சேதம் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது.

