பெட்டாலிங் ஜெயா: மலேசிய அரசாங்கம் நாடாளுமன்றக் கூட்டத்தை இரு வாரங்களில் நடத்தியாக வேண்டும் என்று அம்னோ கட்சித் தலைவர் அஹமட் ஸாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவை ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆகப்பெரிய கட்சியான அம்னோ, நாடாளு மன்றத்தை விரைவில் கூட்ட வேண்டும் என்ற மாமன்னரின் விருப்பத்தை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.
"இதனை அரசாங்கம் செய்யத் தவறினால் மாமன்னரை அவமதிப் பதுபோல கருதப்படும்," என்று நேற்று திரு ஸாஹிட் கூறினார்.
பெகான் டடுக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் அஹமட் ஸாஹிட், மாமன்னரிடம் தெரிவித்ததைப் போல பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றார்.
அப்போதுதான் அரசாங்க நிர்வாக விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றார் அவர்.
இம்மாதம் 16ஆம் தேதி பேசிய மாமன்னர் நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அனைத்துக் கட்சிகளின் கருத்துகளை கேட்டறிந்த பிறகு மாமன்னர் இவ்வாறு கூறியதாகவும் சொல்லப்பட்டது.
ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பிறகு அவசரநிலையை நீட்டிக்க மாமன்னருக்கு விருப்பமில்லை என்றும் சொல்லப்படுகிறது.
ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்னோ, எந்த நேரத்திலும் அரசாங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. சென்ற மார்ச் மாதம் நடைபெற்ற அம்னோ பொதுக் கூட்டத்திலும் அரசாங்கத்துக்கு அளிக்கப்படும் ஆதரவை மீட்டுக் கொள்ளலாம் என முடிவு செய்யப் பட்டது. தற்போதைய அமைச்சரவை யில் அம்னோவைச் சேர்ந்த 14 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
இருந்தாலும் நாட்டின் 80 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு பொதுத்தேர்தலை தள்ளிப்போடுவதற்கு வேறு காரணங்கள் இல்லை என்று அம்னோ தலைவர் டாக்டர் அஹமட் ஸாஹிட் தெரிவித்துள்ளார்.

