ஹாங்காங்: ஹாங்காங்கின் பிரபல ஜனநாயக ஆதரவு பத்திரிகையான ஆப்பிள் டெய்லி அடுத்த சில நாட்களில் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் ஜிம்மி லாயின் ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார்.
சீனாவின் புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்நிறுவனத்தின் சொத்துகளை அதிகாரிகள் முடக்கியிருப்பதால் அந்த நாளேடு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
ஆப்பிள் டெய்லி மூடப்படுவதால் முன்னைய பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங்கின் வெளிப்படையான சுதந்திர சமூகத்தின் பெயருக்கு இழுக்கு ஏற்படும் என்று ஊடகவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆப்பிள் டெய்லியைப் போன்று வெளிநாடுகளுடன் கூட்டு சேர்ந்து சதி செய்ததாக மற்ற நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்படலாம் என்று அவர்கள் கூறினர்.
இந்த நிலையில் ஹாங்காங்கில் அதிக அளவு விற்பனையாகும் 26 ஆண்டுகள் பழமையான நாளிதழின் எதிர்காலம் வரும் வெள்ளிக் கிழமை நடைபெறும் இயக்குநர் சபை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஆலோசகர் மார்க் சைமன் தெரிவித்தார்.
"விநியோகிப்பாளர்கள் எங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் போட முயற்சி செய்தனர். ஆனால் நாங்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை," என்று அமெரிக்காவிலிருந்து தொலைபேசி வழியாகப் பேசிய மார்க் சைமன் சொன்னார்.
"நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. அதனால் இம்மாதத்திற்குள் மூடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆப்பிள் டெய்லியின் சொத்துகள் முடக்கப்பட்டதால் அந்நிறுவனம் வழக்கமான நடவடிக்கைகளை தொடர பணமில்லை.
வெளிநாடுகளுடன் சேர்ந்து சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் ரயான் லாவ், 47, தலைமை நிர்வாக ஆசிரியர் சியூங் கிம்-ஹங், 59 ஆகிய இருவருக்கும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஆப்பிள் டெய்லி அலுவலகத்தை சூறையாடிய 500க்கும் மேற்பட்ட போலிஸ்காரர்கள் மூன்று நிர்வாகிகளை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஆப்பிள் டெய்லியின் உரிமை யாளரும் தொழிலதிபருமான ஜிம்மி லாய் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

