அலோர்ஸ்டார்: மலேசியாவின் கெடா மாநிலத்தின் கூலிம் மாவட்டத்தில் உள்ள துங்கு சுல்தானா பாஹியா பலதுறைத் தொழில் கல்லூரி புதிய தொற்றுக் குழுமமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு பயிலும் ஒன்பது மாணவர்களுக்கு தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அந்தப் பலதுறைத் தொழில் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்ததை கெடா மாநில சுகாதாரத்துறை தலைமை அதிகாரி டாக்டர் முகமது ஹயாட்டி ஒத்மான் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தினார்.
இதனையடுத்து கெடா மாநிலத்தின் கூலிம் மாவட்டத்தில் உள்ள அந்தப் பலதுறைத் தொழில் கல்லூரி மூடப்பட்டதாகவும் அங்கு பயிலும் 800க்கு மேற்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அம்மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர் இயோ கெங் சுவான் ஓர் அறிக்கையில் தெரிவித்தாக மலேசியாவில் வெளியாகும் 'குவாங் மிங்' என்னும் சீன நாளிதழ் தெரிவித்தது.
புதிய தொற்றுக் குழுமமாக அந்தப் பலதுறைத் தொழில் கல்லூரி கண்டறியப்பட்டதையடுத்து அங்கு நடைபெறும் வகுப்புகள் யாவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இணையம் வழி மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருவதாக திரு கெங் கூறினார்.
தொற்றின் தடம் அறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினருக்கு இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி போடப்படுவதற்கு அந்நாடு இலக்கு கொண்டிருந்தது. அது இப்போது அடுத்த மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு கட்டுப்பாட்டுத் தளர்வும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் முதல் தேதி தொடங்கப்பட்ட தொற்றுக்கு எதிரான முடக்கநிலை ஜூன் 28ஆம் முடிவடைகிறது. அதற்குப் பின் இரண்டாம் கட்டத் தளர்வை அந்நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால் தடுப்பூசி போடுவதில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தால் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது காலதாமதமாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சரவாக் மாநிலத்தின் 507 புதிய தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் 7 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர் என்று அம்மாநிலத்தின் பேரிடர் நிர்வாகக் குழு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இதுவரை அம்மாநிலத்தில் 389 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர். இதுவரை சரவாக் மாநிலத்தில் 60,989 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது.
நாட்டில் தொற்று அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சரவாக் நான்காவது இடத்தில் உள்ளது.
சிலாங்கூரில் 1,566 புதிய தொற்று பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோலாலம்பூரில் 507, நெகிரி செம்பிலானில் 585 தொற்று பதிவாகியுள்ளது.
ஜோகூரில் 239, பினாங்கில் 195, சாபாவில் 193, மலாக்காவில் 167, கிளந்தானில் 165, கெடாவில் 142, பாகாங்கில் 131, லாபுவானில் 104, பேராக்கில் 68, திரங்கானுவில் 37, புத்ராஜெயாவில் ஏழு மற்றும் பெர்லிஸ் மாநிலத்தில் இரண்டு பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளன.
மலேசியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4,743 புதிய தொற்று பதிவாகியுள்ளது. இதனுடன் சேர்த்து அந்நாட்டில் மொத்தம் 705,762 பேருக்கு தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மலேசிய சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

