பேங்காக்: தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமான புக்கெட்டை ஜூலை 1ஆம் தேதி மீண்டும் அனைத்துலக வருகையாளர்களுக்குத் திறந்து விடுவதற்கு அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துறை அனுமதி அளித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் சக்சயாம் சின்சோப் நேற்று இதனை சிவில் விமானப் போக்குவரத்துறை சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்தார். இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் தாய்லாந்தில் உள்ள மேலும் ஒன்பது சுற்றுலாத் தளங்கள் வெளிநாட்டினருக்கு மீண்டும் திறந்து விடப்படும் என்றும் அவர் கூறினார்.
தாய்லாந்து மூன்று மாதங்களில் அனைத்துலக வருகையாளர்களுக்கு அதன் சுற்றுலாத் தளங்களை முழுமையாகத் திறந்து விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் சக்சயாம் சம்பந்தப்பட்ட துறைகளைக் கேட்டுக்கொண்டார்.
தொற்றுக்கு எதிரான அனைத்துலக சிவில் விமானப்போக்குவரத்து அமைப்பின் வழிகாட்டி முறைகளை கடைப்பிடிப்பதில் விமான நிறுவனங்கள் கடுமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

