வாஷிங்டன்: ஐரோப்பிய நாடுகளில் கொவிட்-19 தொற்று வியக்கத்தக்க வகையில் குறைந்து வருகிறது. அதனையடுத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்கர்கள் தங்கள் நாடுகளுக்கு வருகை மேற்கொள்வதற்கு கதவைத் திறந்துள்ளன. இருப்பினும் 15 மாதங்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டைத் தளர்த்த அமெரிக்கா முன்வரவில்லை.
அமெரிக்காவில் கடந்த ஜூலை 4ஆம் தேதி வரையிலான கணக்கெடுப்பின்படி, 70 விழுக்காட்டு மக்கள் தொகை குறைந்தபட்ச ஒரு தடுப்பூசியையாவது போட்டுக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
தடுப்பூசி போடும் பணி, இலக்கை நோக்கிச் சரியாகச் செல்வதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டியுள்ளார்.
பெரும்பாலோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அந்நாட்டு சுகாதாரத்துறை தளர்த்தியுள்ளது.
இருப்பினும் பயணங்களுக்கான கட்டுப்பாட்டைத் தளர்த்த அந்நாடு இன்னும் முன்வரவில்லை.
"அறிவியல் அனுமதித்தால் கடல் தாண்டிச் செல்லும் பயணங்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு தளர்த்தப்படலாம் என்று அமெரிக்க உள்துறை பேச்சாளர் நீட் பிரைஸ் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
"அந்தத் தளர்வு எப்போது நிகழும் என்பது இப்போதைக்குத் தெரியவில்லை. உலகின் பொரும்பான்மையான நாடுகளை மூச்சுத் திணறவைக்கும் இந்தக் கொள்ளை நோய்ப் பரவல் குறைந்தால் எல்லைக் கட்டுப்பாட்டுத் தளர்வு சாத்தியமாகும். நாமும் அதைத்தான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்," என்றார் அவர்.
முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆட்சியின்போது ஐரோப்பிய நாடுகளுடனான உறவில் ஏற்பட்ட விரிசல்கள் சரிசெய்யப்பட்டு ஒற்றுமைக்கு வழி காண உறுதியளித்தார் அதிபர் பைடன். ஆனால் இப்போதுள்ள நெருக்கடிச் சூழலில் எல்லைக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதில் அவசரம் காட்டத் தேவைஇல்லை என்று அவர் கூறினார்.
அதிபர் பைடன் நிர்வாகம் தன் அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ ஆகியவற்றுடனான எல்லைக்காட்டுப்பாட்டை ஜூலை 21ஆம் தேதியில் இருந்து மீண்டும் நீட்டித்துள்ளது.
பிரிட்டன், பிரேசில், இந்தியா, சீனா, ஈரான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வரும் வருகையாளர்களுக்கு தடைவிதித்துள்ளது.
இருப்பினும் செய்தியாளர்கள், மாணவர்கள், முக்கிய பயணம் மேற்கொள்வோர் ஆகியோருக்கு இந்த எல்லைக் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிப்பது போன்ற அதிகமான கட்டுப்பாட்டுச் சலுகைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கர்களுக்கு அதன் எல்லையை சில கட்டுப்பாடுகளுடன் திறந்துவிட முடிவு செய்துள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அல்லது கொவிட்-19 சோதனையின் மூலம் தொற்று இல்லையென உறுதியானவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அதன் நாடுகளுக்குள் நுழைய அனுமதியளிப்பதாக அறிவித்துள்ளது.

