செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
bbd33ecf-7fc1-4e22-a59b-1c9cadc99371
-

மனித உரிமை மீறல்; சீனா குறித்து 40 நாடுகள் கவலை

ஜெனீவா: சீனாவில் உள்ள ஸின்ஜியாங், ஹாங்காங், திபெத் போன்ற இடங்களில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கனடா தலைமையிலான நாற்பது நாடுகள், ஐநா மனித உரிமை மன்றத்தில் கவலை தெரிவித்துள்ளன. ஆனால் வழக்கம்போலவே இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டு அறிக்கை ஜெனிவாவில் நடைபெற்ற 42வது கூட்டத்தில் வெளியிடப்பட்டது. ஸின்ஜியாங் உய்கர் தன்னாட்சி வட்டாரத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து மிகுந்த கவலையடைந்துள்ளோம் என்று கனடாவின் தூதர் லெஸ்ட்லி நார்ட்டன் தெரிவித்தார். சீனாவுக்கு எதிரான கூட்டு அறிக்கைக்கு ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

சிட்னி குடியிருப்பாளர்கள்

நகரைவிட்டு வெளியேறத் தடை

சிட்னி: சிட்னியில் 'டெல்டா' கிருமி அதிவேகத்தில் தொற்றுவதால் அண்டை மாநிலங்களுக்கும் பரவாமல் இருக்க அந்நகர குடியிருப்பாளர்கள் வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் நகரின் பாண்டிபீச்சில் 30 பேர் பாதிக்கப்பட்ட புதிய கிருமித்தொற்று குழுமம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிட்னிக்கு வெளியே தேவையற்ற பயணம், ஒன்றுகூடலுக்கு வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அடுத்த வாரம் அமல்படுத்த நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் முடிவு செய்துள்ளார்.

ஜோகூர் சட்டமன்றம் கூடுகிறது;

பிரதமர் முகைதீனுக்கு நெருக்கடி

ஜோகூர் பாரு: ஆகஸ்ட் 12ஆம் தேதி ஜோகூர் சட்ட மன்றத்தைக் கூட்ட ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளார். பொதுமக்களின் நலன் கருதி மாநில சட்டமன்றத்தின் கூட்டத்தில் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே பல மாநிலங்கள் சட்டமன்றத்தைக் கூட்ட தயாராகி வருவதால் நாடாளுமன்றத்தையும் கூட்ட பிரதமர் முகைதீன் யாசினுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று மாமன்னரும் பரிந்துரை செய்திருந்தார்.

இந்தநிலையில் மலேசியாவின் பொருளியல் 2021ல் 4.5 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று உலக வங்கி தெரிவித்தது. இதற்கு முந்தைய கணிப்பில் ஆறு விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்று அது கூறியிருந்தது. மலேசியாவில் இவ்வாண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததை உலக வங்கி காரணமாக சுட்டிக்காட்டியுள்ளது.