சிட்னியின் சில பகுதிகள் முடக்கம்
சிட்னி: சிட்னியில் டெல்டா வகைக் கிருமி அதிகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து அதன் மத்திய நகர்ப்பகுதியிலும் கிழக்குப் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் ஒரு வாரத்துக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.
புகழ்பெற்ற பாண்டி கடற்கரை அருகே உள்ள ஒரு முடி திருத்தகத்தின் தொடர்பில் 65 பேருக்கு இதுவரை கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளது. சிட்னியில் புதிதாக 22 பேருக்கு தொற்று உண்டானதாக நேற்று மாநில அரசாங்கம் கூறியது.
அத்தியாவசியப் பணி, கல்வி, பொருட்கள் வாங்குவது அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றைத் தவிர வேறு காரணங்களுக்காக வெளியே செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நகரின் சில பகுதிகளை முடக்குவது போதாது, முழு முடக்கம் தேவை என்று ஆஸ்திரேலிய மருத்துவச் சங்கம் எச்சரித்தது.
ஹாங்காங் அமைச்சரவை மாற்றம்
ஹாங்காங்: ஹாங்காங்கில் பல்லாண்டு அனுபவம் பெற்ற முன்னைய பாதுகாப்புத் துறைத் தலைவர் ஜான் லீ, அமைச்சரவையில் இரண்டாவது முக்கிய இடமான நிர்வாகத் துறைப் பொதுச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றங்களில் ஒன்றாக திரு லீயின் பதவி போலிஸ் ஆணையர் கிறிஸ் டாங்குக்கு வழங்கப்பட்டது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது. ஜனநாயக ஆதரவு செய்தித்தாளான ஆப்பிள் டெய்லி நேற்று முன்தினம் நிரந்தரமாக மூடப்பட்டதில் திரு லீ முக்கிய பங்கு வகித்தார்.
ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு குறித்த சீனக் கொள்கை இன்னும் கடுமையாகும் என்று அது காட்டுவதாக முதலீட்டாளர்கள் கருத்துரைத்தனர்.
சீனா: பள்ளி தீவிபத்தில் 18 பேர் பலி
ஷாங்ச்சியூ: சீனாவின் ஹினான் மாநிலத்தில் உள்ள ஒரு தற்காப்புக் கலைப் பள்ளியில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் குறைந்தது 18 பேர் மாண்டனர். தீயில் 16 பேர் காயம் அடைந்ததனர். சீனாவின் சிஜிடிஎன் ஊடகநிறுவனம் கூறியது. பாதிக்கப்பட்டவர்களில் பலரும் ஏழு வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் என்றும் கூறப்பட்டது. ஷாங்ச்சியூ நகரத்தில் உள்ள ஸென்ச்சிங் தற்காப்புக் கலைப் பள்ளியில் அவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று அதிகாலையில் மூண்ட தீ சில மணி நேரத்தில் அணைக்கப்பட்டது. ஆனால் தீ மூண்ட காரணம் தெரியவில்லை. ஹினான் மாநிலம் பாரம்பரிய தற்காப்புக் கலைப் பள்ளிகளுக்குப் பேர்போனது.
கனடா பள்ளியில் 751 சடலங்கள்
கெல்கரி/ஆல்பர்ட்டா: கனடாவின் ஸாஸ்காட்ச்சேவன் மாநிலத்தில் பழைய பள்ளி வளாகத்தில் 751 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பழங்குடியினச் சிறுவர்களின் சடலங்கள் என்று பழங்குடி இனத்தவர் அமைப்பு ஒன்று கூறியது.
சடலங்கள் அடையாளமோ சமாதியோ இல்லாமல் புதைக்கப்பட்டிருந்தன. சில வாரங்களுக்கு முன்னர், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மற்றொரு பள்ளியில் 215 பிள்ளைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கனடாவில் ஒரு நூற்றாண்டுக்கு மேல் பழங்குடி இனப் பிள்ளைகள் சுமார் 150,000 பேர் தங்கள் குடும்பத்தா ரிடமிருந்து பிரிக்கப்பட்டு, தங்கும் விடுதிகள் கொண்ட பள்ளிகளில் வளர்க்கப்பட்டனர். அங்கு தாய்மொழியில் பேச அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பல சிறுவர்கள் வீடு திரும்பவில்லை; பல்வகை வதைகளுக்கு ஆளாயினர்.
புதுவகை ஆதிமனிதன் கண்டுபிடிப்பு
ஜெருசலம்: இஸ்ரேலிய ஆய்வாளர்கள், இதுவரை அறிவியல் அறியாத புதுவகை ஆதிமனிதனின் எலும்புகளைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறியுள்ளனர். ஜெருசலத்தின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ரம்லா நகர் அருகே நடத்திய அகழாய்வில் எலும்புகள் கிடைத்தன.
'நேஷர் ரம்லா' என்று ஆய்வாளர்கள் இதற்குப் பெயர் சூட்டியுள்ளனர். ஹோமோ ஜீனஸ் மனித வகைகளின் எந்தப் பிரிவுடனும் இதற்குத் தொடர்பில்லை. இவ்வகை ஆதி மனிதன், சுமார் 120,000 - 140,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கக்கூடும் என்றனர் ஆய்வாளர்கள். அத்துடன் இம்மனிதனின் மண்டை ஓடு வேறு விதமாக இருப்பதாகவும், தாடை இல்லாமல் பெரிய பற்களுடன் இவ்வகை மனிதன் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறினர்.

