ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் டெல்டா கொவிட்-19 கிருமி வகை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அங்கு இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு மிகவும் கடுமையான முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்தத் தகவலை நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரேஜிக்லியான் இன்று தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக சிட்னியின் மையப் பகுதியிலும் கிழக்கு புறநகர்ப் பகுதி களிலும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் ஏற்கெனவே முடக்கநிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆயினும், கொவிட்-19 பாதிப்பு மோசமடைந்து வருவதால் முடக்கநிலைக்கு உட்படுத்தப்படும் வட்டாரங்கள் விரிவாக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிட்னி நகரைச் சுற்றியுள்ள புளூ மவுண்டன்ஸ், சென்ட்ரல் கோஸ்ட், வொலொங்கோங் ஆகிய வட்டாரங்களிலும் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்படும்.
இந்நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 29 பேருக்குச் சமூக அளவில் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக இன்று தெரிவிக்கப்பட்டது.

