ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகள்: அரிய இதய வீக்கம் குறித்த எச்சரிக்கை குறிப்பைச் சேர்த்தது அமெரிக்கா

ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகள்: அரிய இதய வீக்கம் குறித்த எச்சரிக்கை குறிப்பைச் சேர்த்தது அமெரிக்கா

1 mins read
ab5e58c4-2dba-4690-bb77-ec781f3dcec6
படம்: ராய்ட்டர்ஸ் -

ஃபைசர்-பயோஎன்டெக், மொடர்னா தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதால் ஏற்படும் அரிய இதய வீக்கம் குறித்த எச்சரிக்கைக் குறிப்பை அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு தடுப்பூசி மருந்தின் விவரங்களில் சேர்த்துள்ளது.

தடுப்பூசிகள் குறித்து சுகாதாரப் பராமரிப்புச் சேவை வழங்குநர்களுக்கு கொடுக்கப்படும் விவரங்களில் இந்த எச்சரிக்கை சேர்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பின் சில நாள்கள் கழித்து அறிகுறிகள் தென்படும்போது, இதயத் தசை வீக்கம் (myocarditis), இதயப்பை வீக்கம் (pericarditis) ஆகிய இதயம் தொடர்பான அரியவகை பிரச்சினை ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மாதம் 11ஆம் தேதி நிலவரப்படி அமெரிக்காவில் இதுவரை 300 மில்லியன் ஃபைசர்-பயோஎன்டெக், மொடர்னா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் 1,200க்கும் மேற்பட்டோருக்கு இதய வீக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.

அந்த இரண்டு தடுப்பூசிகள் mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

பெரும்பாலும் இளம் வயது ஆண்களே இதய வீக்கப் பிரச்சினையால் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

30 வயதுக்கும் குறைவானோரில் 309 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 295 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இதய வீக்கம் குறித்து விசாரணை நடத்திவருகின்றன.

இதுகுறித்து ஃபைசர், மொடர்னா நிறுவனங்களிடமிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்