சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் டெல்ட்டா கொவிட்-19 கிருமி வகை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அங்கு நேற்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு மிகவும் கடுமையான முடக்கநிலை நடை
முறைப்படுத்தப்படுகிறது.
இந்தத் தகவலை நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரேஜிக்லியான் நேற்று தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக சிட்னியின் மையப் பகுதியிலும் கிழக்கு புறநகர்ப் பகுதி களிலும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் ஏற்கெனவே முடக்க
நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆயினும், கொவிட்-19 பாதிப்பு மோசமடைந்து வருவதால் முடக்கநிலைக்கு உட்படுத்தப்படும்
வட்டாரங்கள் விரிவாக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிட்னி நகரைச் சுற்றியுள்ள புளூ மவுண்டன்ஸ், சென்ட்ரல் கோஸ்ட், வொலொங்கோங் ஆகிய வட்டாரங்களிலும் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்படும்.
இந்நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 29 பேருக்குச் சமூக அளவில் கொவிட்-19
கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதன்மூலம் போண்டாய் கடற்
கரைப் பகுதி கொவிட்-19 குழுமத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியா இதுவரை
கிருமிப் பரவலை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிருமித்தொற்று அபாயம் தலைதூக்கியதும் தனது எல்லைகளை அது உடனடியாக மூடியது.
அதுமட்டுமல்லாது, சமூக இடைவெளி விதிமுறையை அது நடைமுறைப்படுத்தியது.
இந்த விதிமுறைக்கு ஆஸ்திரேலியர்கள் பலர் கட்டுப்பட்டு நடந்துகொண்டதால் கொவிட்-19 பாதிப்பு அபாய நிலையை எட்டவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,400ஆக உள்ளது.
இதுவரை 910 பேர் கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்துவிட்டனர்.
கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை துரிதமாக நடைமுறைப்
படுத்துவதில் ஆஸ்திரேலியா சில சவால்களை எதிர்நோக்குகிறது.
அதே வேளையில் ஆங்காங்கே திடீரென கிருமித்தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.
தடுப்பூசித் தெரிவுகளை அதிகரிக்க நேற்று முன்தினம் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தற்காலிக ஒப்புதல் அளித்தது.
எதிர்பார்க்கப்பட்டதைவிட கிருமிப் பரவல் மோசமாக இருப்பதாக திருவாட்டி பெரேஜிக்லியான் கூறினார்.
முடக்கநிலை அறிவிக்கப்பட்ட வட்டாரங்களுக்கு வெளியே கிருமி பரவுவதே இதற்குக் காரணம்
என்றார் அவர்.

