வாஷிங்டன்: அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளோய்ட்டைக் கொலை செய்த குற்றத்துக்காக முன்னாள் போலிஸ் அதிகாரிக்கு 22 ஆண்டுகள் ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்
பட்டது.
பதவியைத் தவறாகப் பயன்
படுத்தியதற்கும் கொடூரமான முறையில் நடந்துகொண்டதற்கும் 45 வயது டெரிக் சாவினுக்குக் கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் சாவின் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதால் 48 வயது திரு ஃபிளோய்ட் மாண்டார்.
திரு ஃபிளோய்ட்டின் கழுத்தின் மீது வெள்ளைக்காரரான சாவின் முட்டிபோட்டு அழுத்தியதால்
மரணம் ஏற்பட்டது.
சாவின் இச்செயலால் இனவாதத்துக்கு எதிராக உலகெங்கும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.
திரு ஃபிளோய்ட்டைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தமது கட்சிக்காரர் செயல்படவில்லை என்று சாவினின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. சிறைத் தண்டனையுடன் ஆயுதம் வைத்திருக்க அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திரு ஃபிளோய்ட்டின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக சாவினுடன் மூன்று முன்னாள் போலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டன.
சாவினுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை மரணம் அடைந்த திரு ஃபிளோய்ட்டின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் வரவேற்றனர்.
"பிளோய்ட்டுக்கு ஏற்பட்ட கொடுமை எங்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அதிலிருந்து மீண்டு வர இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு உதவும்," என்று வழக்கறிஞர் பென் கிரம்ப் டுவிட்டர் மூலம் தெரிவித்தார்.
ஒருவழியாக போலிஸ் அதிகாரிகளின் மூர்க்கத்தனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதை இந்தத் தீர்ப்பு காட்டுவதாகவும் ஆனால் முழுமையான தீர்வு காண இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்றும் திரு ஃபிளோய்ட்டின் சகோதரி பிரிட்ஜெட் ஃபிளோய்ட் தெரிவித்தார்.
சாவினுக்கு எதிரான தீர்ப்பு நியாயமானது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

