கொழும்பு: இலங்கை அரசியல்வாதி பரத லட்சுமண பிரேம
சந்திராவையும் அவரது ஆதரவாளர்கள் மூவரையும் 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்த குற்றத்துக்காக அந்நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு 2016ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சேவுக்கு நெருக்கமானவரான துமிந்த சில்வாவுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 94 பேரில் துமிந்த சில்வாவும் ஒருவர்.
இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
"இலங்கை அரசாங்கம் சட்டத்துக்கு மதிப்பு தரவில்லை என்பதை இது காட்டுகிறது. பொதுமக்கள் நலன் மீது அதற்கு இருக்க வேண்டிய பொறுப்பை அது அலட்சியப்படுத்துகிறது," என்று இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருக்கும் மனித உரிமை வழக்கறிஞர் அம்பிகா சத்குணநாதன் பிபிசி செய்தி நிறுவனத்திடம் தமது அதிருப்தியைத் தெரிவித்தார்.
"என் தந்தையின் கொலைக்கு நியாயம் கேட்டு நீண்டகாலத்துக்கு சட்டரீதியாகப் போராடினோம். தற்போது கொலைக் குற்றவாளிக்கு அதிபர் பொது மன்னிப்பு வழங்கிவிட்டார். இலங்கையில் நீதித் துறையை மக்கள் இனி எவ்வாறு நம்புவர்? எங்கள் பாதுகாப்பு குறித்து எங்களுக்குக் கவலையாக இருக்கிறது," என்று கொலையுண்ட திரு பரத லட்சுமணன் பிரேமசந்திராவின் மகள் திருவாட்டி ஹிருனிக்கா பிரேமசந்திரா தெரிவித்தார்.
அதிபராகப் பொறுப்பேற்று சில மாதங்களில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கை ராணுவ வீரரான சுனில் ரத்னநாயகேவுக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்சே பொது மன்னிப்பு வழங்கி சிறையிலிருந்து விடுதலை செய்தார்.
2000ஆம் ஆண்டில் யாழ்ப்
பாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மிருசுவில் கிராமத்தில் எட்டு தமிழர்களைக் கொலை செய்த குற்றத்துக்காக சுனிலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மாண்டவர்களில் ஐந்து வயது குழந்தையும் இரண்டு பதின்மவயதினரும் அடங்குவர்.
தற்போது துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு பற்றி இலங்கை அதிபரின் அலுவலகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
துமிந்த சில்வாவுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து இலங்கையில் பலர் சமூக வலைத்தளங்களில் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளனர்.

