அபாயநிலையை எட்டிய கொவிட்-19; பங்ளாதேஷில் மீண்டும் முடக்கநிலை
டாக்கா: பங்ளாதேஷில் கொவிட்-19 கிருமித்தொற்று அபாய
நிலையை எட்டியுள்ளதால் அங்கு மீண்டும் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. முடக்கநிலை நாளை தொடர்கிறது. அனைத்து அரசாங்க, தனியார் அலுவலகங்கள் ஒரு வாரத்துக்கு மூடப்படும். மருத்துவம் தொடர்பான போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவசரகாலச் சேவைக்காக மட்டுமே மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறலாம் என
பங்ளாதேஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரை பில்லியன் டாலர் மதிப்பிலான போதைப்பொருளை அழித்தது மியன்மார்
யங்கூன்: அரை பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள போதைப்பொருளை மியன்மார் அதிகாரிகள் தீயிட்டுக் கொளுத்தினர். யங்கூன் நகரில் போதைப்பொருள் மூட்டைகள் அழிக்கப்பட்டதாக மியன்மார் அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல மண்டலே நகரிலும் டவுங்யி நகரிலும் போதைப்பொருளை அதிகாரிகள் அழித்தனர்.
மியன்மாரின் ஷான் மாநிலத்திலிருந்து ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தப்
படுவதாக தெரிவிக்கப்பட்டது.
பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய கணவரைக் கொன்ற பெண் விடுதலை
பாரிஸ்: தம்மை பாலியல் பலாத்காரம் செய்த கணவரைக் கொன்ற பிரெஞ்சுப் பெண்ணை பிரான்ஸில் உள்ள நீதி
மன்றம் நேற்று முன்தினம் விடுதலை செய்தது. டேனியல் பொலேட்டேயை 2016ஆம் ஆண்டில் 40 வயது வெலரி பகோட் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம், அவற்றில் மூன்று ஆண்டுகளை நீக்கியது. ஏற்கெனவே ஓராண்டு சிறைவாசம் அனுபவித்துவிட்டதால் பகோட் விடுதலை செய்யப்பட்டார். பகோட்டின்
தாயாருடைய இரண்டாவது கணவராக இருந்த பொலேட்டே, பகோட்டையும் மணந்தார். பல ஆண்டுகளாக பகோட்டை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

