வெலிங்டன்: நியூசிலாந்து தலை
நகர் வெலிங்டனில் கொவிட்-19 விழிப்புநிலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரயிறுதியில் வெலிங்டன் நகருக்குச் சென்றிருந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணிக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நியூசிலாந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
"கொவிட்-19 ஆபத்து முழுமையாக நீங்கிவிட்டது என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. இனி கொவிட்-19 ஆபத்து இல்லை என்று உறுதியாகக் கூறிவிட முடியாது. கூடுதல் கொவிட்-19 பரிசோதனைகளை நடத்த வேண்டியிருக்கிறது. அதில் நியூசிலாந்துக்குச் சாதகமான முடிவுகள் கிடைத்தால்தான் விழிப்புநிலையைக் குறைக்க முடியும்," என்று நியூசிலாந்து அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நியூசிலாந்தில் அறிவிக்கப்பட்டுள்ள விழிப்புநிலை காரணமாக சமூக இடைவெளி விதிமுறை நடைமுறைப்படுத்தப்படும். ஆனால் அலுவலகங்கள், பள்ளிகள் வர்த்தகங்கள் வழக்கம்போல இயங்கலாம்.
ஆஸ்திரேலியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அந்நாட்டுடனான சிறப்புப் பயண ஏற்பாட்டை நியூசிலாந்து நேற்று முன்தினம் மூன்று நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. அந்தச் சிறப்பு ஏற்பாட்டின்படி பயணிகளைத் தனிமைப்படுத்த தேவையில்லை.
"கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படுமா என்பது குறித்து நிதானமாக ஆராய இந்த மூன்று நாள் இடைவெளி வாய்ப்பு தரும்," என்றார் திரு ஹிப்கின்ஸ்.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைப் போல டார்வின் நகரிலும் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாநிலத்தின் தலைநகரான டார்வினில் அடுத்த 48 மணி நேரத்துக்கு முடக்கநிலை நடை
முறைப்படுத்தப்படும் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
அங்கு புதிதாக நான்கு பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முடக்கநிலை நீட்டிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக வடக்கு மாநிலத்தின் முதல்வர் மைக்கல் கன்னர் செய்தியாளர் கூட்டத்தின்போது தெரிவித்தார். மக்களின் நலனைக் காக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.

