வாஷிங்டன்: ஈராக்-சிரியா எல்லையில் ஈரான் ஆதரவு போராளிகளுக்கு எதிராக மற்றொரு சுற்று வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா ஞாயிற்றுக் கிழமை அன்று தெரிவித்தது.
இம்முறை ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள், தளவாட வசதிகள் மீது வானூர்தி மூலம் தாக்கப்பட்டதால் பதிலடி தரப்பட்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்தது.
சிரியாவில் உள்ள இரண்டு ஆயுதக் கிடங்குகளுக்கும் ஈராக்கில் உள்ள மற்றொரு கிடங்குக்கும் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் யாராவது கொல்லப்பட்டார்களா அல்லது காயம் அடைந்தார்களா என்பது பற்றி விவரம் தெரியவில்லை.
ஆனால் சேதம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சிரியா-ஈராக் எல்லைத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக கட்டயப் சாயித் அல்-ஷுஹாடா என்ற போராளி அமைப்பு தெரிவித்தது. இதற்குத் தக்க பதிலடி தரப்படும் என்று அது சூளுரைத்தது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவர் பதவிேயற்று இரண்டாவது முறையாக இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் சிரியாவில் தாக்குதல் நடத்த அதிபர் பைடன் முதல் உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
அப்போது ஈராக்கில் நடந்த ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க வீரர்களைப் பாதுகாப்பதில் அமெரிக்க அதிபர் உறுதியோடு செயல்படுவார் என்பதை அண்மைய தாக்கு தல்கள் காட்டுவதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சு கூறி உள்ளது.

