கேன்பரா: ஆஸ்திரேலியாவில் அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்ட டெல்டா கிருமிப் பரவலைத் தடுத்து நிறுத்துவதற்காக 7வது நகரத்தைஅதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
புதன்கிழமை அன்று தொற்றுச்சம்பவங்கள் 200ஐ தொட்டுள்ளது.
சிட்னி, பிரிஸ்பேன், பெர்த், டார்வின், டவுன்ஸ்வில், கோல்ட்கோஸ்ட் உள்ளிட்ட நகரங்களில் நாட்டின் மக்கள்தொகையில் பாதி, அதாவது 12 மில்லியன் மக்கள் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு ஆஸ்திரேலியாவிலும் கிருமித்தொற்று தலைதூக்கியிருப்பதால் 7வது நகரமாக அலிஸ் ஸ்பிரிங்ஸ் நகரம் முடக்கப்பட்டது.
இந்த நகரத்தின் அருகில் வசிக்கும் பழங்குடியினருக்கும் தொற்று பரவக்கூடும் என்று உள்ளூர் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கடும் நெருக்கடி யில் இருப்பதாகக் கூறியுள்ள மாநில முதல்வர்கள், தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் முக்கிய தடுப்பூசியான ஆஸ்ட்ராஸெனகா பயன்படுத்துவதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
பிரதமர் ஸ்காட் மோரிசன் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஆனால் குவின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலிய முதல்வர்கள் அவரது உத்தரவுக்கு எதிராக உள்ளனர்.
ஆஸ்திரேலியா பல மாதப் போராட்டத்துக்குப் பிறகு கிருமிப் பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தது.
எல்லை மூடல், ஹோட்டல் களில் தனிமைப்படுத்துதல், தொடர்பு தடங்களைக் கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளால் கிருமிப் பரவலை அரசு தடுத்து நிறுத்தியது.
கடந்த ஆண்டு கிருமிப்பரவலே இல்லாத நாடாக ஆஸ்திரேலியா பெயர்பெற்றது. இவ்வாண்டில் தொற்றால் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் ஹோட்டல் தனிமைப்படுத்தும் இடத்திலிருந்து தொற்று பரவியதால் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற் பட்டது. சிட்னியில் புதிய கிருமிப் பரவல் குழுமம் உருவானது. அதன் பிறகு ஐந்து மாநிலம் மற்றும் பல பகுதிகளுக்கு தொற்றுச் சம்பவங்கள் பரவின. பிரதமர் ஸ்காட் மோரிசனின் தடுப்பூசித் திட்டம் மெதுவாக நடை பெறுவதாகவும் குறை கூறப்படு கிறது.

