சிங்கப்பூரில் தீவிர கண்காணிப்பில் இருக்கின்ற அல்லது உயிர்வாயு சிகிச்சை தேவைப்படுகின்ற கொவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை 18 நாட்களில் இல்லாத அளவுக்கு 10 பேராகக் குறைந்துவிட்டது என்று சுகாதார அமைச்சு நேற்று (ஜூலை 9) தெரிவித்தது.
நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 22 கிருமித்தொற்றுக் குழுமங்கள் இருக்கின்றன. அவற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று முதல் 94 பேர் வரைப்பட்டதாக இருக்கிறது. மருத்துவமனையில் 85 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். பெரும்பாலானவர்கள் நன்கு குணமடைந்து வருகிறார்கள்.
இருந்தாலும், எட்டுப் பேருக்கு உயிர்வாயு சிகிச்சை தேவைப்படுகிறது. இரண்டு பேர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருக்கின்றனர்.
தீவிர கண்காணிப்பில் அல்லது உயிர்வாயு சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 18 நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது.