செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f85836c1-b232-4d40-bbd3-45974a1f5dde
-

பெய்ஜிங்கில் பலத்த மழை, புயல்

பெய்ஜிங்: தொடர்ந்து பெய்யும் கன மழையாலும் வீசும் பலத்த காற்றாலும் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன, பள்ளிகளும் சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன.

இந்த ஆண்டின் ஆக மோசமான புயல் காற்று பெய்ஜிங்கில் வீசவிருப்பதைத் தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் ஒரு நாளில் 100 மில்லிமீட்டர் அளவு வரையிலான மழை பதிவாகக்கூடும் எனக் கணிக்கப்பட்டது. 14 ஆறுகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

இந்தோனீசிய அரசாங்க தடுப்பூசி விற்பனைத் திட்டத்தில் அதிருப்தி

ஜகார்த்தா: பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தோனீசிய அரசாங்கம் நடத்தும் கிமியா ஃபார்மா நிறுவனம் அதன் கொவிட்-19 தடுப்பூசிகளை விற்கும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளது.

திட்டத்தை வரைவதில் முதலில் கவனம் செலுத்தப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

தடுப்பூசி போடும் தனியார் திட்டம் ஒன்றுக்காக வாங்கப்பட்ட சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசிகளை நேற்றே விளம்பரப்படுத்த கிமியா ஃபார்மா திட்டமிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து அந்தத் தடுப்பூசிகள் விற்கப்படுவதற்கான காரணம் என்ன, அந்த முயற்சியின் மூலம் ஏன் நிறுவனங்கள் லாபம் ஈட்டவேண்டும் போன்ற கேள்விகள் எழுந்தன.

தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய பொருளியல் நாடான இந்தோனீசியா தற்போது கொவிட்-19 டெல்டா வகைக் கிருமிப் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் ரிச்சர்ட் பிரேன்சன்

செல்வந்தர் ரிச்சர்ட் பிரேன்சன் விண்வெளியில் இருக்கும் காட்சி. படம்: ராய்ட்டர்ஸ்

நியூ மெக்சிகோ: விண்வெளிக்குச் சென்று தனது பல ஆண்டுக் கனவை நிறைவேற்றியுள்ளார் பிரபல செல்வந்தர் ரிச்சர்ட் பிரேன்சன்.

வெர்ஜின் அட்லான்டிக் நிறுவனத்தின் சிறிய விண்வெளி விமானத்தில் நேற்று முன்தினம் அவர் விண்ணுக்குச் சென்றார்.

அதற்கு சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அவர் தனது சாதனையைக் கொண்டாடினார்.

இந்த நிகழ்வு, சாதாரண மக்களாலும் விண்வெளிக்குப் போகமுடியும் என்ற நம்பிக்கையைப் பலருக்கு அளித்துள்ளது.