பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன, ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வேகமாக பரவக்கூடிய அல்ஃபா மற்றும் டெல்டா வகை கொவிட்-19 கிருமிப் பரவலைக் கையாள அந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
தாய்லாந்தில் இதுவரை குறைந்தது 345,000 பேர் கொவிட்-19 கிருமித் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். குறைந்தது 2,791 பேர் அதற்குப் பலியாகிவிட்டனர்.
பேங்காக்கைத் தவிர மேலும் ஒன்பது மாநிலங்களில் கிருமித் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அப்பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன்படி ஐவருக்கு மேல் ஒன்றுகூடக்கூடாது, பொதுப் போக்குவரத்துச் சேவைகள் இரவு ஒன்பது மணிக்கு மேல் இயங்கக்கூடாது. கடைத்தொகுதிகளில் உள்ள பேரங்காடிகள், உணவகங்கள், வங்கிகள், மருந்தகங்கள் உள்ளிட்டவை திறந்திருக்கலாம். ஆனால், இதர கடைகள் மூடியிருக்கவேண்டும்.
கொவிட்-19 கிருமிப் பரவலை தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா சரியாகக் கையாளவில்லை எனப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். முடுக்கிவிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முன்னதாகவே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவேண்டும் என்பது சிலரின் கருத்து.

