சோல்: தென்கொரியாவில் தொடர்ந்து 7வது நாளாக தொற்று எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
நேற்று முன்தினம் தொற்று 1,150ஆக பதிவானது. அதையடுத்து அந்நாடு குடியிருப்புப் பகுதிகளுக்கும் வர்த்தக நடவடிக்கை ஆகியவற்றுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சோலில் இதுவரை கண்டிராத வகையில் தொற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. அதற்குக் காரணம் வெகுவிரைவில் பரவக்கூடிய டெல்டா வகை உருமாறிய கிருமியே என்கின்றனர் அதிகாரிகள். கிருமித்தொற்று பாதிப்பின் நாள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டினாலும் இது கடந்த வாரம் இருந்த எண்ணிக்கையான 1,378ஐக் காட்டிலும் குறைவு.
இப்போது அடையாளம் காணப்பட்ட கிருமித்தொற்றுக் குழுமங்கள் முன்பு கண்டறியப்பட்ட குழுமங்களைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானவை என்று கூறப்படுகிறது.
தென்கொரியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான முதியோர் மற்றும் இயலாதோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தென்கொரியாவில் புதிய தொற்று எண்ணிக்கையைச் சேர்த்து மொத்தம் 170,296 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு 2,048 பேர் பலியாகிவிட்டனர். இதனை தென்கொரியாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகவை நேற்று தெரிவித்தது.
தென்கொரியா முன்னதாக நாள் ஒன்றுக்கு 850,000 தடுப்பூசி போடுவதற்கு இலக்குக் கொண்டிருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக அது நாளுக்கு 30,000 பேராக மெதுவடைந்துள்ளது.
52 மில்லியன் பேர் மக்கள் தொகையுள்ள தென்கொரியாவில் இதுவரை 11.6 விழுக்காட்டினருக்கு மட்டுமே இருமுறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
30.4 விழுக்காட்டினருக்கு முதல் முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன. அந்நாட்டுக்கு மேலும் 9 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை இந்த மாதத்திற்குள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

