வெல்லிங்டன்: நியூசிலாந்தின் வெல்லிங்டன் நகர் துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 'வைக்கிங் பே' என்னும் மீன்பிடிக் கப்பலில் இருந்த சிப்பந்திகளில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
ஸ்பானிய நாட்டைச் சேர்ந்த மீன்பிடிக்கப்பல் ஒன்று கடந்த வாரம் நியூசிலாந்திற்கு வந்து சேர்ந்தது. அந்தக் கப்பலின் சிப்பந்திகள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்டது. அதனையடுத்து அந்தக் கப்பல் தனிமைப்படுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட 15 சிப்பந்திகளும் வெல்லிங்டனில் தனிமைப்படுத்தப்படும் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை நியூசிலாந்தின் சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
கடந்த வாரம் தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு சிப்பந்திகளில் ஒருவருக்கு டெல்டா வகைக் கிருமித்தொற்று இருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்தனர். ஏற்கெனவே நியூசிலாந்தில் தொற்று பாதித்தோருக்கும் இந்த மீன்பிடிக் கப்பலில் பாதிக்கப்பட்டோருக்கும் எவ்விதத் தொடர்பும் கண்டறியப்படவில்லை. தொற்று குறித்த தடம் அறியும் சோதனைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
சமூகத்தில் பெரிய அளவில் பரவியிருந்த கொரோனா தொற்றை பல கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் நியூசிலாந்து கட்டுப்படுத்திவிட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் அங்கு தொற்று பதிவானது. இதுவரை அங்கு 2,500 பேருக்குத் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டது. தொற்றால் 26 பேர் மரணமடைந்தனர். இப்போது மீன்பிடிக் கப்பல் வழியாக கண்டறியப்பட்டுள்ள தொற்று அதிகாரிகளுக்குத் தலைவலியைக் கொடுத்துள்ளது.
கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் அந்தக் கப்பலை சுங்கச்சாவடி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
எனவே, அந்தக் கப்பல் சிப்பந்திகளில் கிருமித்தொற்று பரவுவதற்கான சாத்தியம் இல்லை. அவர்களுடன் தொடர்பில் உள்ள அரசாங்க மற்றும் துறைமுக அதிகாரிகள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். அனைவரும் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது உறுதிசெய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தக் கப்பல் சிப்பந்திகள் மலேசியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்று தெரியவந்துள்ளது.

