மியன்மார்: உயிர்வாயுப்
பற்றாக்குறையால் மக்கள் அவதி
யங்கூன்: மியன்மாரில் கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க உயிர்வாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. யங்கூனில் உயிர்வாயு உருளையை நிரப்புவதற்கு உயிர்வாயு விநியோக நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் வெகுநேரம் காத்துக்கிடந்ததாக சமூக ஊடகங்களில் படங்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அந்நாட்டை ஆளும் ராணுவ ஆட்சியாளர்கள், கொவிட்-19 நோயாளிகளைக் காப்பாற்ற உயிர்வாயு விநியோகம் அதிகரிக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளனர்.
தைவான் பாதுகாப்பு குறித்து
ஜப்பான் எச்சரிக்கை
தோக்கியோ: தைவானின் பாதுகாப்பு குறித்து ஜப்பான் முதன்முதலாக தனது தற்காப்பு அமைச்சின் வருடாந்திர பாதுகாப்பு ஆய்வறிக்கை ஒன்றில் எச்சரித்துள்ளது. அந்த வட்டாரத்தில் நிகழும் ஆயுதப் போட்டாப் போட்டி மற்றும் மறைமுகமான போர் தொடுத்தல் போன்றவற்றை அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டி ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் நிலைத்தன்மையுடன் ஆன சூழல் நிலவுவது ஜப்பானுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவேதான் இந்த வட்டாரச் சூழல் குறித்து அணுக்கமாகக் கண்காணிக்க வேண்டியது ஜப்பானுக்கு அவசியமாகிறது என்று ஜப்பானின் வெளியுறவு அமைச்சு அதன் வெள்ளையறிக்கையில் கூறியுள்ளது.
தாய்லாந்து: சீனத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 'பூஸ்டர்'
பேங்காக்: தாய்லாந்து அண்மையில் முதல்முறையாக சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவேக் கொரோனா தடுப்பூசிகளை தனது சுகாதார ஊழியர்களுக்குச் செலுத்தியது. அத்துடன் இரண்டாவது தடுப்பூசிக்குக் காத்துக்கொண்டிருப்போருக்கு ஆக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராஸெனிகா அல்லது ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளைச் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளது. சீனாவின் வூஹானில் உருவான கொரோனா கிருமி, பலவகைகளில் உருமாறி உலகை அச்சுறுத்தி வருகிறது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் சீனத் தயாரிப்பான சினோவேக் தடுப்பூசியின் தடுப்பாற்றல் குறித்த எச்சரிக்கையும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. "முதல் முறை சினோவேக் ஊசி போட்டுக்கொண்டவர்களுக்கு மூன்றில் இருந்து நான்கு வாரங்கள் கழித்து இரண்டாவதாக ஆஸ்ட்ராஸெனிகா தடுப்பூசி போடப்படும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் அருடின் சர்ன்விரகுல் தெரிவித்தார். இரண்டு முறை சினோவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 'பூஸ்டர்' தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அருடின் தெரிவித்துள்ளார்.

