கொவிட்-19 கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் தென்கொரியா
சோல்: தென்கொரியாவில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அங்கு மேலும் 1,615 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொவிட்-19 கட்டுப்பாடுகளை தென்கொரியா மேலும் கடுமையாக்க முடிவெடுத்துள்ளது. டெல்டா கொவிட்-19 கிருமி வகை பரவி வருவதாலும் தடுப்பூசி போடும் திட்டம் மெதுவடைந்துள்ளதாலும் தென்கொரியர்கள் மத்தியில் அக்கறை எழுந்துள்ளது.
நாடெங்கும் சமூக இடைவெளி விதிமுறை கடுமையாக்கப்படும் என்று தென்கொரிய பிரதமர் கிம் பூ கியும் தெரிவித்துள்ளார்.
எட்டுக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களும் மதுபானக் கூடங்களும் நள்ளிரவுக்குள் மூடப்படும்.
தலைநகர் சோலில் மாணவர்கள் இம்மாதம் 25ஆம் தேதிவரை வீட்டிலிருந்து இணையம்வழி பாடம் பயில்வர்.
மெக்சிகோவில் கொவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அங்கு அதிக அளவில் அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி அங்கு மேலும் 11,137 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 219 பேர் மாண்டனர்.
மெக்சிகோவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,604,711ஆக அதிகரித்துள்ளது. மரண எண்ணிக்கை 235,277ஆக அதிகரித்துள்ளது.
கனமழையால் லண்டனில்
திடீர் வெள்ளம்
லண்டன்: பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் விடாது பெய்த கனமழை காரணமாக அங்கு திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நிலத்துக்கு அடியில் இருக்கும் ரயில் நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுப் போக்குவரத்து தடைபட்டது.
வெள்ளம் காரணமாக வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை சிலருக்கு ஏற்பட்டது.
பாகிஸ்தான் பேருந்தில் வெடிப்பு;
9 சீன நாட்டவர்கள் மரணம்
பெஷாவர்: பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் பேருந்து ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து, அது பள்ளத்துக்குள் விழுந்து நொறுங்கியது. இதில் குறைந்தது 13 பேர் மாண்டனர். உயிரிழந்தவர்களில் சீனாவைச் சேர்ந்த ஒன்பது பேரும் இரண்டு பாகிஸ்தானிய ராணுவ வீரர்களும் அடங்குவர்.
வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவைச் சேர்ந்த ஒன்பது பேர் மரணமடைந்ததை பாகிஸ்தானில் உள்ள சீனத் தூதரகம் உறுதி செய்தது.
இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.

