மலேசியா: புதிய உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று

மலேசியா: புதிய உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று

1 mins read
03472fa2-244e-48b2-a917-138d49ccdb8b
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புக்கிட் பிந்தாங் பகுதியில் வெறிச்சோடி காணப்படும் வீதிகள். படம்: இபிஏ -

மலேசியாவில் கொவிட்-19 தொற்று தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்றைய (ஜூலை 15) நிலவரப்படி அங்கு புதிய உச்சமாக 13,215 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

கடந்த செவ்வாய்க்கிழமை பத்தாயிரத்தைத் தாண்டிய கொரோனா தொற்றுச் சம்பவங்கள் இன்று 13,000ஐத் தொட்டன.

கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 880,782 என்று அந்நாட்டு சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா டுவிட்டரில் பதிவிட்டார்.

சிலாங்கூரில் ஆக அதிகமாக 6,120 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாயின. அடுத்த நிலைகளில் நெகிரி செம்பிலானில் 1,603 பேருக்கும் கோலாலம்பூரில் 1,499 பேருக்கும் புதிதாகத் தொற்று கண்டது.

சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட காணொளிகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மருத்துவமனைகள், கிருமிப் பரிசோதனை நிலையங்கள், தனிமைப்படுத்தப்பட்டோருக்கான நிலையங்கள் ஆகியவை கூட்டநெரிசலால் திணறுவதைக் காட்டின.

தொழிற்சாலைகளிலும் வேலையிடங்களிலும் பரிசோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டதே தொற்று எண்ணிக்கை கூடியதற்குக் காரணம் என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகிருமித்தொற்று