ஜகார்த்தா: கொவிட்-19 கிருமிப் பரவல் இந்தோனீசியாவில் மோச
மடைந்து வருவதாகவும் டெல்டா வகை கிருமித்தொற்று காரணமாக எதிர்பார்த்ததைவிட வேகமாக
பரவியுள்ளதகாவும் அந்நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் அங்கு கிருமி
பரவல் கட்டுக்குள் வரவில்லை.
புதன்கிழமையன்று ஆக அதிகமாக 54,000 சம்பவங்கள் அங்கு பதிவாகின. இம்மாத தொடக்கத்தில் இருந்ததைவிட இது பத்து மடங்கு அதிகம்.
இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வகை கிருமி பரவுவதற்கான காலம் இரண்டு முதல் மூன்று வாரங்களாக இருக்கும் நிலையில் அன்றாட தொற்று சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் என்று இந்தோனீசிய மூத்த அமைச்சர் லுஹுத் பாண்ட்ஜெய்டன் கூறினார்.
"நாங்கள் ஏற்கெனவே மோசமான நிலையில் இருக்கிறோம்.
"நாளொன்றுக்கு 60,000 அல்லது அதற்கும் சற்று கூடுதலான கிருமித் தொற்று சம்பவங்கள் என்பது பரவாயில்லை. 100,000த்திற்கு போகாது என்று நம்புகிறோம். ஆனால் அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராகிறோம்," என்றும் அவர் சொன்னார்.
ஜாவா தீவில் உள்ள மருத்துவ
மனைகளில் அண்மைய நாட்களாக மருத்துவ படுக்கைகள் நிரம்பிவிட்டன. சிகிச்சையளிக்க முடியாமல் நோயாளிகள் திருப்பி அனுப்பப்
படுகின்றனர்.
எனவே, அங்கு பல்வேறு கட்டடங்கள் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. புதிய மருத்துவ பட்டதாரிகள், தாதியர்பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஜனவரியில் தடுப்பூசி போட தொடங்கிய இந்தோனீசியாவின் 270 மில்லியன் மக்கட்தொகையில் சுமார் 5.8 விழுக்காட்டினர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.

