சிட்னி: சிட்னியில் இருந்து திரும்பியவர்களால் மெல்பர்னில் டெல்டா வகை கிருமிப் பரவல் தலைதூக்கியுள்ளதைத் தொடர்ந்து விக்டோரியா மாநிலம் மீண்டும் முடங்கியது.
மெல்பர்ன் மட்டுமல்லாமல் விக்டோரியா மாநிலம் முழுவதற்கும் ஐந்து நாள் முடக்கநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை நோயான கொவிட்-19 கிருமித்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து அங்கு ஐந்தாவது முறையாக முடக்கநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிட்னியைச் சேர்ந்த ஊழியர்கள் மெல்பர்னில் உள்ள வீடு ஒன்றிற்கு தளவாட பொருட்களை கொண்டு சென்றதையடுத்து அங்கு மீண்டும் கிருமி பரவ தொடங்கியது. இதை
யடுத்து அண்மைய கிருமிப் பரவலால் அங்கு இதுவரை 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"முடக்கநிலை உத்தரவு அவசியம். முடக்கநிலை உத்தரவை நடைமுறைப்படுத்த தயங்கினால், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவது சிரமமாகிவிடும்," என்றார் விக்டோரியா மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ்.
இதற்கிடையே, சிட்னியில் இருந்து சென்ற பயணிகளால் பிரிஸ்பனில் புதன்கிழமையன்று 3 தொற்று சம்பவங்கள் பதிவாகின.
எனவே, விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களுடனான பயண ஏற்பாட்டை நியூசிலாந்து நிறுத்தி வைத்துள்ளது.
தடுப்பூசி போடும் பணி ஆஸ்திரேலியாவில் மிகவும் மந்தமாக இருப்பதே, அங்கு டெல்டா வகை தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்துவதற்கான காரணமாக கூறப்படுகிறது.
பல்வேறு விநியோகிப்பாளர்களிடம் இருந்து போதுமான தடுப்பூசிகளைப் பெறுவதில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மிகவும் மெதுவாக செயல்படுவதாக சுகாதார வல்லுநர்கள், அரசியல் எதிரிகள் விமர்சித்து வருகின்றனர்.
எனவே, ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளார் ஸ்காட் மோரிசன்.

