செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
3177c04f-28ae-4c32-97ce-e7c06367bfc3
-

'மியன்மாரில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது'

யங்கூன்: மியன்மார் கிருமிப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இறுதிச் சடங்கு செய்யவதற்காக கொண்டு வரப்படும் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 200 சடலங்கள் எரிக்கப்பட்டதாகவும் அது வழக்கத்தைவிட இரண்டு மடங்கிற்கும் அதிகம் என்றும் அவர்கள் கூறினர். மியன்மாரில் புதன்கிழமையன்று ஆக அதிகமாக 145 பேர் தொற்று காரணமாக மாண்டனர். ஆனால் அதிகாரிகள் குறிப்பிடுவதைவிட இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சீனப் பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை

வாஷிங்டன்: சீனாவின் ஷின்ஜியாங் மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களுக்குத் தடை விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நேற்று நிறைவேறியது.

ஷின்ஜியாங் மாநிலத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் சீன அரசால் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்ட உய்கர் இன மக்களின் கட்டாய உழைப்பால் உருவாக்கப்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது. இந்நிலையில் செனட் சபையில், ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா அதிபர் பைடனின் ஒப்புதலுக்குப் பின் சட்டமாக்கப்படும்.