பேங்காக்: தாய்லாந்தில் இதற்குமுன் இல்லாத வகையில் நேற்று புதிதாக 9,692 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் மேலும் 67 பேர் இறந்துவிட்டனர். இதையடுத்து, மொத்த பாதிப்பு 381,907ஆகவும் உயிரிழப்பு 3,099ஆகவும் உயர்ந்துவிட்டது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தாய்லாந்து போராடி வருகிறது. இவ்வேளையில், அந்நாட்டிற்கு 61 மில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதற்கான காலக்கெடுவை மேலும் ஐந்து மாதங்கள் நீட்டிக்கும்படி ஆஸ்ட்ராஸெனக்கா நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
மொத்தம் 66 மில்லியன் மக்கள் வாழும் தாய்லாந்தில் இதுவரை கிட்டத்தட்ட ஐந்து விழுக்காட்டினர் மட்டுமே இரு தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர்.
இதனிடையே, கிருமிப் பரவல் தொடர்ந்து கூடி வருவதால் அதிகரித்துள்ள உயிர்வாயுத் தேவையைச் சமாளிக்க, அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்படும் என்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோவி தெரிவித்துள்ளார்.

