செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a8374204-d822-4665-afb3-cacb57d06d89
-

ஹங்கேரியில் மூன்றாவது தடுப்பூசி

புடாபெஸ்ட்: விருப்பப்படுவோர் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மூன்றாவது கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்துள்ளார். எந்தத் தடுப்பூசியைப் போடுவது என்பதை மருத்துவர்கள் முடிவுசெய்வர் என்றும் 2வது தடுப்பூசி போட்டு குறைந்தது நான்கு மாதங்களுக்குப்பின் 3வது தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மொத்தம் பத்து மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஹங்கேரியில் இதுவரை 808,661 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விட்டனர்; 30,013 பேர் இறந்துவிட்டனர்.

நியூசிலாந்தில் உழவர்கள் போராட்டம்

வெலிங்டன்: சுற்றுச்சூழல் கொள்கைகளையும் பருவநிலை மாற்ற ஒழுங்குமுறைகளையும் தளர்த்த வலியுறுத்தி நியூசிலாந்தில் நேற்று நாடு தழுவிய அளவில் உழவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதாகைகளுடன்கூடிய டிராக்டர்களில் அவர்கள் பல்வேறு நகரங்களின் முக்கியச் சாலைகளில் அணிவகுத்துச் சென்றனர். இது, நியூசிலாந்தில் ஊரகப் பகுதியினர் மேற்கொண்டுள்ள ஆகப் பெரிய போராட்டமாகக் கருதப்படுகிறது. கடுமையான ஊழியர் பற்றாக்குறை நிலவுவதால் வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் பேர் வர ஏதுவாக எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கைகளில் ஒன்று.

பிலிப்பீன்சில் தலைகாட்டிய 'டெல்டா'

மணிலா: உருமாறிய 'டெல்டா' கொவிட்-19 கிருமி பிலிப்பீன்சில் உள்ளூர் அளவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு உள்ளூர்ப் பரவல்மூலம் 11 பேரையும் மொத்தத்தில்

16 பேரையும் 'டெல்டா' தொற்றிவிட்டது. அவர்களில் ஒருவர் மாண்டுபோனார். 'டெல்டா' தொற்றியோரில் ஐவர் உள்ளூர் வாசிகள் என்றும் அவர்கள் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், கத்தார், பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து திரும்பியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.