பல நாடுகளிலும் சில இந்திய மாநிலங்களிலும் கொவிட்-19 பரவல் அதிகரித்து வருவதால், கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் அடுத்த 100 முதல் 125 நாள்கள் மிக முக்கியமான காலகட்டம் என்று இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
"கொரோனா பாதிப்பு குறைந்து இருக்கிறது. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதற்கான ஓர் அறிகுறி," என்று கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தேசிய பணிக்குழுவின் தலைவர் வி.கே.பால், சுகாதார அமைச்சின் வாராந்திர செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.
உலகம் கொரோனா மூன்றாவது அலையை நோக்கிச் செல்வதைச் சிவப்பு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
"நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது. ஆனால், பொதுச் சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாவிடினும் தனிமனிதர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளாவிடினும் நிலைமை மோசமாகலாம்," என்று நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினருமான திரு பால் எச்சரித்துள்ளார்.

