சென்னை: சென்னையில் 'ஏடிஎம்' அட்டைகளில் உள்ள தகவல்களை ரகசியமாகத் திருடி, அந்தத் தகவல்களைக் கொண்டு போலி 'ஏடிஎம்' அட்டைகளைத் தயாரித்து பணம் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று சென்னையில் பல இடங்களில் கைவரிசையை காட்டியுள்ளது.
இது குறித்து தகவல் கிடைத்த போலிசார் சென்னையில் ஏடிஎம் இயந்திரங்கள் உள்ள பகுதிகளிலும் முக்கிய சாலைகளிலும் கண்காணிப்புப் பணியை முடுக்கிவிட்டிருந்தனர்.
இந்நிலையில் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை முட்டுக்காடு சோதனைச்சாவடியில் நடந்த வாகனத் தணிக்கையின்போது, ஒரு வாகனத்தில் இருந்த நான்கு பேர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலிசார் அவர்களின் காரில் முழுமையாகச் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பல போலி ஏடிஎம் அட்டைகளும், ஏடிஎம் அட்டையின் தகவலைத் திருடுவதற்குப் பயன்படுத்தப்படும் 'ஸ்கிம்மர்' கருவியும் சிக்கின.
இதுதொடர்பாக அந்த வாகனத்தில் இருந்த திருச்சியைச் சேர்ந்த 32 வயதான லாவா சந்தான், புதுவையைச் சேர்ந்த 30 வயதான பிரவின் கிஷோர், திண்டுக்கலைச் சேர்ந்த 37 வயதான சிக்கந்தர் பாதுசா, 29 வயதான பிரவின்குமார் ஆகிய நான்கு பேரையும் போலிசார் கைது செய்தனர்.
அவர்களில் 30 வயது பிரவீன் கிஷோர் வாகனம் ஓட்டுநர் என்பதால் அவர் மீது போலிசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த லாவா சந்தன் என்பவர் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது.
லாவா சந்தன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏடிஎம் கார்டுகளை ஸ்கிம்மர் கருவி மூலம் ஸ்கேன் செய்து பணத்தைக் கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை கோவை மத்திய குற்றப்பிரிவு போலிசார் கடந்த 2017ஆம் ஆண்டு கூட்டாளிகளுடன் கைது செய்திருப்பதும், பின்னர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு முன்னிலையாகாமல் அவர் தலைமறைவாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிக்கந்தர் என்பவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உடற்பிடிப்பு நிலையங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் வேலை பார்த்து வந்ததும், அங்கு வாடிக்கையாளர்களின் ஏடிஎம் தகவல்களை ஸ்கிம்மர் கருவி மூலம் திருடியதும் தெரியவந்தது.
பின்னர், அந்தத் தகவல்களை வைத்து போலியான ஏடிஎம் அட்டைகளைத் தயார் செய்து அதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

