காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கார் ஓட்டுநர் 1,330 திருக்குறள்களையும் 17 மணி 19 நிமிடங்களில் தலைகீழாக எழுதி சாதனை படைத்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார், நாட்டுச்சேரியைச் சேர்ந்தகார்த்தியமூர்த்தி.
பிளஸ்-1 வரை படித்த இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் விட்டு, கோவையில் கார் ஓட்டுநராக உள்ளார். இருந்தபோதிலும் தமிழ் மீதான பற்றால் திருக்குறள் போன்ற தமிழ் நூல்களை படித்து வந்துள்ளார்.
மருத்துவ விரைவு வாகனங்களில் எழுத்துகள் தலைகீழாக எழுதப்பட்டிருக்கும். அதுபோன்ற ஒரு மருத்துவ வாகனத்தைக் கண்ட கார்த்தியமூர்த்திக்கு, திருக்குறளை நாம் ஏன் இவ்வாறு எழுதக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அதன் அடிப்படையில் சில மாதங்களிலேயே 1,330 குறள்களையும் தலைகீழாக எழுதக் கற்றுக்கொண்டார்.
பின்னர் சிறிய தாளில் 1,330 திருக்குறள்களையும் எழுதி முடித்துள்ளார். இதற்கு அவருக்கு 45 நாட்கள் ஆகின. அதுவும் முழுநேரமாக இல்லாமல் அந்த 45 நாட்களிலும் தனது ஓய்வு நேரங்களில் மட்டுமே அவர் இந்த தலைகீழ் எழுதும் வேலையைச் செய்துள்ளார்.
மேலும் இதனை உலக சாதனையாக மாற்றும் முயற்சியாக நேற்று முன்தினம் காரைக்குடியில் அரியக்குடி சாலையில் உள்ள ஓர் அரங்கில் சோழன் உலகச் சாதனை புத்தக நிறுவனம், வள்ளுவர் பேரவை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் திருக்குறள்களை தலைகீழாக எழுதி கூடியிருந்தோர் பரவசப்படுத்தினார்.

