சோமாலியரிடம் ரூ.3 லட்சம் பணம் பறிப்பு: ஈரானியர் 4 பேர் கைது
சென்னை: சென்னையில் வெளி மாநிலக் கொள்ளையர்கள் அதிகரித்துள்ள நிலையில் இப்போது வெளிநாட்டவரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.
அண்மையில் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் சோமாலியா நாட்டைச்சேர்ந்த ஒருவரிடம் இருந்து மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பணம் வைத்திருந்த பையைப் பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர் சிலர்.
பணத்தை இழந்த சோமாலிய நாட்டவர் அங்கிருந்த காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலிசார் வழிப்பறித்திருடர்கள் நான்கு பேரைக் கைதுசெய்தனர்.
கோவளத்தில் பதுங்கியிருந்த அவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
திருப்பட்டூர் கோயில் புனரமைப்பு
மதுரை: பல்லவர் காலக் கட்டிடக் கலைக்கு ஆதாரமாகத் திருப்பட்டூரில் உள்ள கைலாசநாத சுவாமி கோயில் சிற்பங்கள் மற்றும் கட்டுமானங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறநிலையத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"திருச்சி மாவட்டத்தின் மணச்சநல்லூர் அருகேயுள்ள திருப்பட்டூரில் கைலாசநாத சுவாமி கோயில் உள்ளது.
"பல்லவர் காலக் கட்டிடக் கலைக்கு ஆதாரமான இக்கோயில், இரண்டாம் நந்தி வர்மன் காலத்தைச் சேர்ந்தது. கோயில் மண்டபம் புகைபடிந்து காணப்படுகிறது.
"இந்த மண்டபத்தில் ஏராளமான தூண்கள் சிதைந்துள்ளன. எண்ணெய் படிந்து, கை வைத்தாலே வழுக்கி விடுகிறது. துர்நாற்றம் வீசுகிறது. முறையான பராமரிப்புப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. இந்தக் கோயிலைப் புனரமைத்து முறையாகப் பராமரித்தால் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றலாம். எனவே, கோயிலை உடனடியாகப் புனரமைக்க உத்தரவிட வேண்டும்," திண்டுக்கல்லைச் சேர்ந்த நாராயண மூர்த்தி என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுச்செய்திருந்தார்.
16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு நிலையம் நேற்று அறிவித்துள்ளது.
"தெற்குக் கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

