பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர், கோலாலம்பூர் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, தடுப்பூசி போட்டுக்கொண்ட வாடிக்கையாளர்களுடன் வர்த்தகத்தைத் தொடர்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று சில்லறை, உணவக நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
பல சில்லறை வர்த்தகர்கள் கடினமான சூழ்நிலையில் இருப்பதாகவும் பலர் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் மலேசிய சில்லறை வர்த்தகர்கள் சங்க தலைவர் ஷெர்லி டான் கூறினார்.
"வர்த்தகங்கள் மீண்டும் செயல்பட அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டால், அது தற்போதைய நிலைமையை மிகவும் மோசமானதாக்கிவிடும். கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் என்ற நிச்சயமற்ற நிலை கவலையளிப்பதாக உள்ளது," என்றார் அவர்.
குறைந்தது ஒருமுறையாவது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்
களுடன் வர்த்தகங்களை மீண்டும் தொடர அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கிருமித்தொற்றுக்கு மத்தியில் வாழ நாம் பழகிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே நிலைமைக்கு ஏற்றவாறு மனநிலையையும் அணுகுமுறையையும் மாற்றிக் கொள்வது முக்கியம்," என்றார் உணவக, சமையல் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவர் ரிங்கோ காவ் சொன்னார்.
இதற்கிடையே, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்
களுக்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சலுகை குறித்து அடுத்த வார தேசிய மீட்சி மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார்.
நடமாட்ட கட்டுப்பாடு நடப்பில் இருக்கும்போதுகூட, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்க இந்த தளர்வு அனுமதி அளிக்கக்கூடும் என்றும் அவர் சொன்
னார்.
அதுபோல், கொவிட்-19 கிருமித்தொற்று தற்போது, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கான கொள்ளைநோயாக மாறி உள்ளது என்று கூறியுள்ளார் மலேசிய சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா.
"உலகம் முழுவதிலும் தடுப்பூசியினால் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
"தடுப்பூசி, தரவுகளை மக்கள் நம்பவேண்டும். விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள்," என்றார் அவர்.

