ஜகார்த்தா: அன்றாட தொற்று எண்ணிக்கையில் இந்தோனீசியா, பிரேசிலை முந்தியுள்ள நிலையில், நெருக்கடிநிலை போன்ற உணர்வோடு செயல்பட வேண்டும் என்று தனது அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ.
வெள்ளிக்கிழமையன்று இந்தோனீசியாவில் 54,000 பேர் தொற்றுக்கு ஆளாகினர். அதே நாளில் பிரேசிலில் 45,500 தொற்று சம்பவங்களே பதிவானது.
தடுப்பூசி விற்கும் திட்டத்தை கைவிட்டுள்ள அதிபர் விடோடோ, அரசாங்க அதிகாரிகள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளதோடு 'சமூக உணர்வை' வெளிப்படுத்துமாறும் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் அமைச்சரவை செயலாளர் பிரமோனோ அனுங் தெரிவித்துள்ளார்.
"அவசரகால கட்டுப்பாடுகள் உள்ள இக்காலகட்டத்தில், அனைத்து அமைச்சுகள், நிறுவனங்கள், தலைவர்களிடையே நெருக்கடி நிலை போன்ற உணர்வு இருக்க வேண்டும் என்று அதிபர் வலியுறுத்தியுள்ளார்," என்றும் அவர் சொன்னார்.
அமைச்சர்கள் வெளிநாடுகளில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் தடுப்பூசிகளை தனிப்பட்டவர்
களுக்கு விற்கும் மருந்து நிறுவனங்களின் திட்டங்கள் ஆகியவை இந்தோனீசிய மக்களிடம் கேள்விகளையும் கோபத்தையும் தூண்டியது.
அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும். தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கான செலவுகளை ஏற்கெனவே திட்டமிட்டபடி, அதற்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளும் என்று அனுங் தெளிவுபடுத்தினார்.

