பேங்காக்: தாய்லாந்தில் தொடர்ந்து நான்காவது நாளாக கொவிட்-19 தொற்று 11,000ஐத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 11,784 தொற்றுப் பாதிப்பும், 81 தொற்று மரணங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை நேற்று தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமையன்று பதிவான தொற்றுப்பாதிப்பு 11,397ஐ காட்டிலும் இது அதிகம். தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 100 பேர் சிறைக்கைதிகள் என்று கூறப்பட்டது. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 403,386 பேர் தொற்றால் பாதிப்பும், 3,341 பேர் தொற்று மரணங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
சென்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து தொற்றின் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது.
தொற்றுப் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 386,307 ஆகியுள்ளது.
இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 262,225 ஆகியுள்ளது.
தாய்லாந்தில் கொவிட்-19 தொற்று தீவிரமடைந்து வரும் இவ்வேளையில், நேற்று முன்தினம் ஜனநாயக ஆதரவாளர்கள் கட்டுப்பாடுகளையும் மீறி, ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி, அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளைக் கண்டித்தும், பிரதமரைப் பதவி விலகக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களின் தொற்று கட்டுப்பாட்டு விதிமீறலால் தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இப்போதுள்ள சூழலில் கொரோனா தொற்றால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனை ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
தடுப்பூசி கொள்முதல் செய்வதில் அரசாங்கம் சுணக்கம் காட்டுவதால் தான் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் அதனால் நடைமுறைப்படுத்தப்படும் கட்டுப்பாடுகளால் நாட்டின் வர்த்தகமும் பொருளியலும் பெரியளவில் பாதிக்கப்படுவதாகவும் அரசாங்கத்தின் மீது குறைகூறல்கள் எழுந்துள்ளன.
தொற்று அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நேற்று, கட்டுப்பாட்டை நீட்டிப்பதாக அறிவித்தது.
அதன்படி, வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்ளமுடியாது. அத்துடன் பெரிய கடைத்தொகுதிகள் திறக்கப்படமாட்டா. மூன்றாவது நாளாகத் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் அங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மேலும் மூன்று மாவட்டங்களில் இரவுநேர முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

