கோலாலம்பூர்: மலேசியாவில் பெருநாளுக்குப் பிறகு, மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று அந்நாட்டின் துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்றுத் தெரிவித்தார். அதன்படி முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு என்னென்ன விலக்குகள் அளிக்கப்படும் என்பது அப்போது அறிவிக்கப்படும் என்றார் திரு இஸ்மாயில்.
செய்தியாளர்களிடம் நேற்றுக் காலை பேசிய துணைப்பிரதமர் இஸ்மாயில், தடுப்பூசி விநியோகப் பணி நல்ல முறையில் செயல்படுவதை உறுதி செய்வதற்கான சிறப்புக்குழு, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கட்டுப்பாடுகளில் என்னென்ன விலக்குகள் அளிப்பது என்பது குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளது.
விரைவில் அந்த ஆய்வின் முடிவுகளை அவர்கள் விரைவில் அமைச்சரவையிடம் சமர்ப்பிப்பர் என்று திரு இஸ்மாயில் கூறினார்.
சிறப்புக் குழுவின் ஆய்வு முடிவுகளுக்குப் பின், முன்னதாக பிரதமர் அறிவித்திருந்தபடி, இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து சில விலக்குகள் அளிக்கப்படும்," என துணைப் பிரதமர் கூறினார்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எந்த நிலையிலான பயணங்களை மேற்கொள்ள முடியும் என்பதும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர் அணியைக் கொண்ட துறைகளில் எந்தெந்த துறைகளுக்குத் தளர்வுகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படலாம் என்பன போன்றவை இந்த ஆய்வில் விரிவாக அலசி ஆராயப்படும் என்று துணைப்பிரதமர் இஸ்மாயில் கூறினார்.
முன்னதாக நேற்று, பிரதமர் முகைதீன் யாசின், வரும் அக்டோபர் மாதத்திற்குள் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போடுவதே அரசாங்கத்தின் இலக்கு.
தேசிய கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின்கீழ், தடுப்பூசித் திறனை நாளொன்றுக்கு 500,000 ஆக அதிகரிப்பதன் மூலம் இந்த இலக்கை நாம் எட்டலாம் என்று பிரதமர் முகைதீன் தெரிவித்தார். முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்களைக் கொண்ட துறைகள் சில கட்டுப்பாட்டுத் தளர்வுகளுடன் செயல்பட அனுமதி அளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் பிரதமர் அறிவித்திருந்தார்.
நேற்றைய நிலவரப்படி, மலேசியாவில் 9.5 மில்லியன் பேர், தங்கள் முதல் தடுப்பூசியையும் 4.4 மில்லியன் பேர் முழுமையான தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி நாட்டில் இதுவரை 14,347,285 தடுப்பூசி மருந்துகள் போடப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி 4,531,550 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டின் 13.9 விழுக்காட்டினர் முழுமையாகவும், மேலும், 9,815,735 பேர் முதல் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார். அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாநிலங்களில், லபுவான் முன்னணியில் உள்ளது. இங்கு 62 விழுக்காட்டினர் முழுயைமாகத் தடுப்பூசி போட்டுள்ளனர். அதற்கடுத்த நிலையில் சரவாக் மாநிலத்தில் 43.8 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர் என பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

