4 சந்தைகளுக்குச் சென்றோர் வரிசையில் காத்திருந்து பரிசோதனை சாதனம் பெற்றனர்

4 சந்தைகளுக்குச் சென்றோர் வரிசையில் காத்திருந்து பரிசோதனை சாதனம் பெற்றனர்

2 mins read
5bd66f57-370a-44ec-9b6b-b95a81d9a30a
ஹேக் ரோடு புளோக் 5ல் வழங்கப்பட்ட சாதனத்தை இன்று பெற்றுக்கொண்ட குடியிருப்பாளர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இலவசமாக விநியோகம் செய்யப்படும் ஆன்டிஜன் விரைவு சுயபரிசோதனை கருவிகளைப் பெற்றுக்கொள்ள இன்று (ஜூலை 21) கடைசி நாள் என்பதால் சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வரிசைகளில் நின்றனர்.

கடைசி 14 நாட்களில் நான்கு சந்தைகள், உணவு நிலையங்களுக்குச் சென்றோருக்கு இந்த கொவிட்-19 கிருமி சுயபரிசோதனைச் சாதனம் வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு அருகே வசிக்கும் குடியிருப்பாளர்களும் இச்சாதனைத்தைப் பெறுவோர் எண்ணிக்கையில் அடங்கும்.

செங் சான், சோங் பூன், கேலாங் சிராய், ஹேக் ரோடு ஆகிய சந்தை மற்றும் உணவு நிலையங்கள் அவை.

இச்சாதனம் வழங்கும் பணி தீவு முழுவதும் 22 சமூக நிலையங்களிலும் வசிப்போர் குழு நிலையங்களிலும் நேற்று தொடங்கியது. அந்த இரு நாள் விநியோகப் பணி இன்று மாலை 6 மணி அளவில் நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

கேலாங் சிராய் வசிப்போர் குழு நிலையத்தில் இச்சாதனத்தைப் பெற இன்று காலை 10 மணியளவில் 20 பேர் வரிசையில் நின்றிருந்ததை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் கண்டார்.

ஒவ்வொருவருக்கும் சாதனத்தை வழங்கும் பணி ஐந்து நிமிடங்களில் மிக விரைவாக நடைபெற்றது.

அதனை இலவசமாகப் பெற்றவர்களில் ஒருவரான திரு ராஜு, 76, என்பவர் இரு நாட்களுக்கு முன்னர் ஹேக் ரோடு சந்தை மற்றும் உணவு நிலையத்திற்குச் சென்றிருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளரிடம் கூறினார். தாம் நல்ல உடல்நிலையை உணர்வதாகக் கூறிய அவர், இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்.

உள்ளூரில் கிருமி பரவுவது அண்மையில் அதிகரித்தது. புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் பலரும் சில சந்தைகள் மற்றும் உணவு நிலையங்களுக்குச் சென்று வந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கிருமிப் பரவலைத் தடுக்கும் முயற்சியாக இவ்விடங்களுக்குச் சென்றோருக்கு இலவச சுய பரிசோதனைச் சாதனம் வழங்கப்பட்டது.