சிட்னி: ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய நகரங்களில் கடந்த சில நாட்களாக முடக்கநிலை நடப்பில் இருந்தாலும் அங்கு கிருமித்தொற்று ஏறுமுகமாகவே உள்ளது.
ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் முடக்கநிலை உத்தரவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், தளர்வுகள் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அங்கு கிருமிப் பரவல் தீவிரமடைந்து வருகிறது.
கடந்த நான்கு வாரங்களாக முடங்கியுள்ள சிட்னியைத் தலைநகரமாகக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நேற்று 110 புதிய தொற்று சம்பவங்கள் பதிவாயின. நேற்று முன்தினம் அந்த எண்ணிக்கை 78ஆக இருந்தது.
அதுபோல் நேற்று முன்தினம் 9 தொற்று சம்பங்கள் மட்டுமே பதிவான விக்டோரியா மாநிலத்தில். நேற்று 22 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகினர். அங்கு கிட்டத்தட்ட இரண்டு வாரகாலமாக முடக்கநிலை உள்ளது.
"நாம் சில வாரங்களுக்கு முன்பே, முடக்கநிலை உத்தரவைச் செயல்படுத்தாமல் இருந்திருந்தால், இந்நேரம் தொற்று சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் இருந்திருக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை," என்றார் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன்.
தொற்று கண்டறியப்படுவதற்கு முன்பு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கைதான் தற்போது கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று கூறும் சுகாதார நிபுணர்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு முன்பு அந்த எண்ணிக்கை சுழியமாக இருக்க வேண்டும் என்கின்ற
னர்.
இந்நிலையில், முடக்கநிலை எப்போது தளர்த்தப்படும் என்ற நிச்சயமற்ற சூழல் பற்றியும் போலிசாரின் உயர் கண்காணிப்பில் இருப்பது குறித்தும் பலர் விரக்தியை வெளிப்
படுத்தியுள்ளதாக பிபிசி செய்தி கூறுகிறது.

