பெய்ஜிங்: சீனாவின் ஹெனான் மாநிலத்தில் கிட்டத்தட்ட ஒருவாரமாக கொட்டித் தீர்த்த கனமழைக்கு 33 பேர் மாண்டுவிட்ட நிலையில், தற்போது அம்மாநிலத்தின் வடக்கு நகரங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநில வானிலை ஆய்வு மையம் ஹெனானின் வடக்கில் உள்ள ஜின்க்சியாங், அன்யாங், ஹெபி மற்றும் ஜியாவோசுவோ ஆகிய நான்கு நகரங்களுக்கு புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அங்கு அதிக அபாய அளவான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
ஹெனான் மாநிலத்தில் இதுவரை பெய்த கனமழையால் 1.22 பில்லியன் யுவான் (S$257 மில்லியன்) பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகிறது.
பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகிவிட்டன. சாலைகள், ரயில் பாதைகள் மோசமாக சேதமடைந்து உள்ளன.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஜெங்ஜோ நகரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள் சாலைகளில் ஆங்காங்கே குவியல் குவியலாக கிடந்தன.
கனமழை காரணமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப் பாதை ஊழியர்கள் பலி
இதற்கிடையே, தெற்கு சீனாவில் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த ஷிஜிங்சன் சுரங்கப்
பாதைக்குள் நீர் சூழ்ந்ததையடுத்து அதில் சிக்கிக்கொண்ட 14 ஊழியர்களும் மாண்டுவிட்டதாகவும் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் குவாங்டாங் மாநில நீர்தேக்கத்திற்கு அடியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதையில் நீர் எப்படி புகுந்தது என்பது குறித்து அதிகாரிகள் எதுவும் கூறவில்லை.
ஜூலை 15ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பலர் ஈடுபடுத்தப்
பட்டதற்கு எந்த பலனும் கிடைக்க வில்லை.

